
ஆதார் மூலம் போலி வாக்காளர்களை அடையாளம் காண்பதில் திமுகவுக்கு என்ன சிக்கல்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கான அடையாள அட்டை குறித்த முடிவுகளை எடுக்க தேர்தல் கமிஷன் கூட்டிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைவில் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க;- முதலைக்கண்ணீர்.. ஆதாரத்துடன் வசமாக சிக்கிய நிர்மலா.. சபாநாயகர் என்ன செய்ய போகிறீர்கள்? வெங்கடேசன் கேள்வி.!
இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை கேட்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்திலுள்ள தேர்தல் வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. இதைச் சாதகமாக பயன்படுத்தி, கள்ள வாக்குகள் போடுவதன் மூலம் தேர்தலையும், ஜனநாயகத்தையும் ஒரு சில கட்சிகள் கேள்விக்குறி ஆக்குகின்றனர்.
இந்தியாவில் உள்ள அடையாள அட்டைகளில், அதிகபட்ச பாதுகாப்புடன் துல்லியமாக இருப்பது ஆதார் எண் அடையாள அட்டை மட்டுமே, வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் அடையாள அட்டையையும் இணைப்பதன் மூலம் ஏராளமான போலி வாக்காளர் அடையாள அட்டைகளை நீக்க முடியும். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஆதார் அட்டையும் ரேஷன் குடும்ப அட்டையின் இணைந்த போது, பல லட்சக்கணக்கான போலி குடும்ப அட்டைகள் பிடிபட்டன. இதன் மூலம் அரசுக்கும் மிகப் பெரிய நிதி இழப்பீடு தவிர்க்கப்பட்டது. இதேபோல வாக்காளர் அடையாள அட்டையிலும் உள்ள குளறுபடிகளை நீக்குவதற்கு அவற்றை ஆதார் அட்டையுடன் இணைப்பது ஒன்று தான் ஒரே வழி.
இதையும் படிங்க;- கையில் ஆவணமும் இல்லை.. மண்டையில் மூளையும் இல்லை.. அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி.!
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அடையாள அட்டை இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆதார் அட்டை இணைப்பின் மூலம் போலி வாக்காளர்களை அடையாளம் காண்பதில் திமுகவிற்கு என்ன சிக்கல்? ஆதார் அட்டையை ஆதாரமாகக் கொண்டால் கள்ள ஓட்டுக்கள் போடுவது தடுக்கப்படும். கள்ள ஓட்டுகளை தடுப்பதால் திமுகவிற்கு என்ன இழப்பு? வாக்களிக்கும் மக்களை விட வாக்காளர் அடையாள அட்டை அதிகமாக இருப்பது தெரிந்தும் அதை நீக்குவதற்கான முயற்சிக்கு தடையாக திமுக ஏன் இருக்கிறது?
அதிமுக, தேமுதிக, பாஜக இந்த இணைப்பிற்கு வரவேற்பு தெரிவித்து கள்ள ஓட்டையும் போலி வாக்காளர்களையும் தடுக்க நினைக்கும் போது, திமுக ஏன் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது? திமுகவின் தோழமைக் கட்சியான, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைக்க வரவேற்பு தெரிவிக்கும் போது, போலி வாக்காளர்களுக்கும் கள்ள ஓட்டுக்கும் சாதகமாக திமுக பேசுவதற்கு காரணம் என்ன? ஆகவே வரப்போகும் தேர்தல்களில் நேர்மையான வாக்குபதிவு நடப்பதற்காக, ஆதார் எண் அடையாள அட்டையை, அடிப்படை ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும், போலி மற்றும் கள்ள வாக்குகளை தடுக்க வேண்டும் என்றும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- தொழிலாளர்களை வஞ்சிக்கும் திமுக...கொடுத்த வாக்குறுதியை ஓராண்டாக ஏமாற்றி சாதனை..! ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை