ம்பானி - அதானி மூலமாக சொத்துக் குவிப்பை ஏற்படுத்தி அவர்கள் மூலம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 2022 வரை 5272 கோடி நன்கொடை குவித்ததை விட மோடியின் மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும் ? தமிழக அமைச்சர்களின் ஊழலைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?
அம்பானி - அதானி மூலமாக சொத்துக் குவிப்பை ஏற்படுத்தி அவர்கள் மூலம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 2022 வரை 5272 கோடி நன்கொடை குவித்ததை விட மோடியின் மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும்? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் நாள்தோறும் ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடுகிற வகையில் செயல்பட்டு வருவது எல்லையற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறி தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. இவரது செயல்பாடுகள் நமது வளர்ச்சிக்கு பெரிதும் உதவிக் கொண்டிருப்பதாக தமிழக முதல்வர் கூறியது மிகவும் சரியான கருத்தாகவே தோன்றுகிறது. ஏனெனில், இவரது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி அரசியலை தமிழக மக்கள் பார்த்து வெறுப்பதால் தமிழக அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
undefined
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி ஒன்றில் 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒலி உண்டாகும்' என்ற வரிகளுக்கு ஏற்ப இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற வகுப்புவாத சக்திகளை வீழ்த்துகிற முன்னோடி தளபதியாக செயல்படுவதைத் தெளிவாகக் காண முடிகிறது. கொள்கையில் உறுதியோடு, தெளிவான பார்வையோடு, தொலைநோக்கு சிந்தனையோடு, வகுப்புவாத நச்சு கருத்துகளை முறியடிப்பதில் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். பாஜகவை பற்றி குறிப்பிடும் போது, மதவாதம் என்பதைத் தவிர, பாஜகவிடம் வேறு கொள்கை ஏதும் இல்லை. ஆட்சிக்கு வந்தாலும் சாதனை காட்டி வாக்குகளைப் பெற முடியவில்லை, வெறுப்பு அரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள்.
ஆனால், இந்தியா கூட்டணியின் வலிமை என்பது மதநல்லிணக்கம். நாங்கள் அரசியல் சட்டம் வரையறுக்கும் கொள்கைகளை நம்பி நிற்கிறோம் என்று தெளிவாக தமது கொள்கைப் பாதையை வகுத்துக் கொண்டு கம்பீரமாக பீடுநடை போட்டு வருவதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, வேலை வாய்ப்பு வழங்கவில்லை, தமிழகத்தில் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். குற்றச்சாட்டு கூறகிற அண்ணாமலை, பாஜக 9 ஆண்டு சாதனைகளை பற்றி கூறுவதை தவிர்த்து விட்டு சாதனைகளை படைத்து வருகிற தமிழக அரசின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்.
2024-ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர், அதாவது ரூபாய் 375 லட்சம் கோடி மதிப்பிலுள்ள பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்திக் காட்டுவேன்' என்று பிரதமர் மோடி பலமுறை உறுதிபட கூறியிருக்கிறார். ஆனால், இந்நிலையை அடைவதற்கு இந்தியாவின் வளர்ச்சி இரு மடங்காக உயர வேண்டும். கடந்த 9 ஆண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி விலகுகிற போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62. ஆனால், 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பாஜக ஆட்சியில் 82.71 ஆக சரிந்துள்ளது. இதன்படி 40 சதவிகிதம் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. 2014 இல் வங்கியில் 100 ரூபாய் செலுத்தியிருந்தால் அதன் மதிப்பு இன்றைக்கு ரூபாய் 60 ஆக குறைந்துள்ளது. இதனால் இழப்பு மக்களின் முதலீட்டிற்கே தவிர, அரசுக்கு அல்ல.
தமிழக அரசின் கடனை பற்றி அண்ணாமலை பேசுகிறார். ஆனால், மார்ச் 31, 2023 நிலவரப்படி ஒன்றிய பாஜக அரசின் மொத்த கடன் ரூபாய் 155.6 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57.1 சதவிகிதம். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது இருந்த மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி. ஆனால் 2014 இல் இருந்து 2023 வரை 9 ஆண்டுகளில் 100 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஒன்றிய பாஜக அரசு கடன் வாங்கி நாட்டை திவாலான நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. 2014-க்கு முன்பு இந்திய குடிமகன் ஒவ்வொருவர் மீது சராசரியாக ரூபாய் 43 ஆயிரம் மட்டுமே கடன் இருந்தது. அது தற்போது ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பாஜக ஆட்சியின் வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. இதனால் பலன் அடைந்தவர்கள் சில தொழிலதிபர்கள் தான் என்பதை சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பார்ம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் மொத்த சொத்து மதிப்பில் 77 சதவிகிதத்தை வைத்துள்ளனர். 2022 இல் மட்டும் 73 சதவிகித சொத்து ஒரு சதவிகித கோடீசுவரர்களுக்குச் சென்றுள்ளது. அதேநேரத்தில் 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பு 1 சதவிகிதம் தான் உயர்ந்துள்ளது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 2022 ஆம் ஆண்டின் கோடீசுவரர்களின் பட்டியல் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து 1830 சதவிகிதம் உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரும், மோடியின் நெருங்கிய நண்பருமான கௌதம் அதானி உலக கோடீசுவரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டில் 609-வது இடத்திலிருந்து 2022-இல் 3-வது இடத்திற்கு உயர மோடியின் ஆதரவு இல்லாமல் சாத்தியமா ? அம்பானி - அதானி மூலமாக சொத்துக் குவிப்பை ஏற்படுத்தி அவர்கள் மூலம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 2022 வரை 5272 கோடி நன்கொடை குவித்ததை விட மோடியின் மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும் ? தமிழக அமைச்சர்களின் ஊழலைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது ?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று மோடி 2014 தேர்தல் பரப்புரையின் போது கூறினார். 9 ஆண்டுகளில் 18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை இல்லா திண்டாட்டம் 23 சதவிகிதம் கடுமையாக உயர்ந்திருக்கிறது. வேலை வாய்ப்பு வழங்குவதற்கு மாறாக கடந்த 8 ஆண்டுகளில் 12.5 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். கிராமப்புறத்தில் 57 சதவிகிதத்தினரும், நகர்ப்புறத்தில் 80 சதவிகிதத்தினரும் வேலை இழந்துள்ளனர். தமிழகத்தில் அந்நிய முதலீட்டின் மூலம் தொழில் வளர்ச்சியைப் பெருக்கி வேலை வாய்ப்பு வழங்குதவாக ஆதாரத்தோடு வெளிவருகிற தமிழக அரசின் அறிக்கையை படிக்காமல் அரசியல் விரோத உணர்ச்சியோடு அண்ணாமலை கருத்துகள் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.