நீதிபதி கர்ணனை பிடிக்க ஒத்துழைக்க முடியுமா? முடியாதா? - மேற்கு வங்க டிஜிபி தமிழக டிஜிபிக்கு காட்டமான கடிதம்...

First Published Jun 9, 2017, 7:58 PM IST
Highlights
West bengal DGP Letter to Tamilnadu DGP For arrest Judge karnan


தலைமறைவான நீதிபதி கர்ணனை பிடிக்க ஒத்துழைப்பு கொடுக்க முடியுமா? முடியாதா? என்று தமிழக காவல்துறை மீது கொந்தளிப்பைக் கொட்டியிருக்கிறார் மேற்குவங்கத்தைச் சேர்ந்த டிஜிபி சுர்சித்கர் புர்க்யஸ்தா.

சென்னையில்  இருந்து கொல்கத்தா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக 2015-ஆம் ஆண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது. இதனையடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. 

அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கர்ணன் முழுமையாக ஒத்துழைக்காததோடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு எதிரான உத்தரவுகளையும் பிறப்பித்தார். 

இந்நிலையில், நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்காததால் உச்சநீதிமன்றத்தை அவமதித்ததால் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் சென்னை வந்த போது அவர் தலைமறைவாகிவிட்டார். 

இந்த நிலையில், தற்போது மேற்குவங்க காவல்துறை டிஜிபி தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ’கடந்த மே 9 ம் தேதியன்று நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர் சென்னையில் இருக்கிறார் என்பதை உறுதி செய்தபிறகே, இங்கு 10ம் தேதியன்று நாங்கள் வந்தோம். ஆனாலும், இன்றுவரை அவரைப் பிடிக்க முடியவில்லை. 

நாங்கள் அனைத்து இடங்களிலும் உங்கள் போலீசாருடன் இணைந்து தேடினோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, இன்றுவரை தங்கியிருந்து அவரைத் தேடிவருகிறோம். ஆனாலும் முன்னேற்றமில்லை. இனியாவது தமிழக போலீஸ் முறையான ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தண்டனை ரத்து பற்றி சாதகமான செய்திகள் வராதநிலையில், இந்த கடிதத்தின் மூலம் மீண்டும் நீதிபதி கர்ணன் விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது. வரும் ஜூன் 11ம் தேதியன்று கர்ணன் பணி ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி கர்ணனை கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தன்னை கைது செய்யாமலிருக்க வேண்டும் என்று நீதிபதி கர்ணன் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது குறிப்பிடதக்கது.
 

click me!