'அதிமுக சண்டை' நாடே வேடிக்கை பார்க்குது... அருவெறுப்பா இருக்கு... சசி கணவர் நடராஜன் வேதனை

 
Published : Jun 09, 2017, 05:48 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
'அதிமுக சண்டை' நாடே வேடிக்கை பார்க்குது... அருவெறுப்பா இருக்கு...  சசி கணவர் நடராஜன் வேதனை

சுருக்கம்

Sasikala Husband Natarajan Statements about ADMK Party problems

இரு அணிகளும் ஒன்று சேருங்கள் என்று இந்திய பிரதமரே சொல்லும் அளவுக்கு, அ.தி.மு.க.வின் குடும்ப சண்டை அகிலமே தெரிந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் அருவெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை அனைவரும் ஒருங்கிணைந்து காப்பாற்ற வேண்டும் என்று நடராஜன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சசிகலாவின் கணவர் நடராஜனின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

1987 டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மரணம் அடைந்ததும் அவரால் உருவாக்கப்பட்ட அதிமுகவிலும், ஆட்சியிலும் வெற்றிடம் ஏற்பட்டது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக (ஜெயலலிதா), அதிமுக (ஜானகி) என நான்கு முனை போட்டி நிலவியது.அந்தத் தேர்தலில் 79 லட்சம் வாக்குகள் பெற்று திமுக ஆட்சி அமைத்தது. 30 எம்.எல்.ஏ.க்களை பெற்று அதிமுக ஜெயலலிதா அணி 2-வது இடத்தையும், காங்கிரஸ் 3-வது இடத்தையும், ஒரு இடத்தில் மட்டுமே வென்ற அதிமுக ஜானகி அணி 4-வது இடத்தையும் பிடித்தது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் தோல்வி அடைந்த ஜானகி அம்மையார், அவரது அணியின் உயர்மட்டக் குழுவை கூட்டினார். எம்.பி., எம்.எல்.ஏ., வாரியத் தலைவர் என 13 ஆண்டுகள் பதவிகளில் அமர்த்தி எம்.ஜி.ஆர். அழகுபார்த்தார். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு ஆண்டிப்பட்டி தொகுதியில் நான் வெற்றிபெற நீங்கள் எதுவும் செய்யவில்லை. எனவே, எனது தலைமையிலான அணியை கலைத்து விடுகிறேன். நீங்கள் ஜெயலலிதாவுடன் சேர்ந்து செயல்படுங்கள் கூறிவிட்டார். அதன்படி 1988 பிப்ரவரி முதல் வாரத்தில் தனது தலைமையிலான அணியை ஜானகி அம்மையார் கலைத்து விட்டார். அதன் தொடர்ச்சியாக இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தைகள் நடந்தன. 

முன்னாள் அமைச்சர்கள் மாதவன், முத்துசாமி ஆகியோர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து இணைப்பு பற்றி பேசினார்கள். ஜானகி அணியின் பொதுக்குழுவை கூட்டி ஜெயலலிதா தலைமையில் செயல்படுவதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். இரட்டை இலையை மீட்க ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் கையெழுத்துடன் கூடிய பிரமாணப் பத்திரம் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது. 

ஜெயலலிதா தலைமையை ஏற்கிறோம் என்று ஜானகி அணியின் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானமும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அங்கீகரித்தும், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அவருக்கு அதிகாரம் வழங்கியும் 1989 பிப்ரவரி 11-ம் தேதி அன்றைய தலைமை தேர்தல் ஆணையர் பெரிசாஸ்திரி எழுத்துப்பூர்வ ஆணையை வழங்கினார். 

அன்று முதல் ஜெயலலிதா மறையும் வரை அவரே பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார். இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி எஸ்.டி.சோமசுந்தரம், கண்ணப்பன், திருநாவுக்கரசர் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகி தோல்வியை சந்தித்தார்கள்.

அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் இன்று ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரட்டை இலை எங்களுக்கே என்று ஒருசாரர் மனு கொடுக்க, இல்லை.. இல்லை.. எங்களுக்கே என்று ஆளும் அ.தி.மு.க. கட்சியினர் மனு கொடுக்க, இச்செயல் பலகோடி தொண்டர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயலலிதா தான் பொதுச் செயலாளர், ஜெயலலிதாவே எல்லாம் என்று அடங்கி ஒடுங்கி இருந்தவர்கள் எல்லாம், அவர் மறைவுக்கு பிறகு, தாங்கள் தான் எல்லாம் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் மற்றவர் மீது சீறிப்பாய்ந்து, சேற்றை வீசுவது பொதுமக்களிடையே முகஞ்சுளிக்க வைக்கிறது.

2 அணிகளும் ஒன்று சேருங்கள் என்று இந்திய பிரதமரே சொல்லும் அளவுக்கு, அ.தி.மு.க.வின் குடும்ப சண்டை அகிலமே தெரிந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் அருவெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்டுக்கொண்டுவர வேண்டும் என்று ஒரு கோடிக்கும் மேலாக உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் நித்தம்.. நித்தம்.. தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நான் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் ஏற்பட்ட அபிமானத்தாலும், நெருக்கத்தாலும், அவர்கள் சென்ற அரசியல் பாதையில் நடைபோட்டவன், என்னாலான தொண்டினை செய்தவன் என்ற முறையிலும், 30 ஆண்டு காலத்திற்கு ஜெயலலிதா என்னை ஏற்றுக்கொண்டிருந்தபோதும், ஒதுக்கியபோதும் அ.தி.மு.க.வின் உயர்வுக்கும், வெற்றிக்கும் நான் பங்காற்றி இருக்கிறேன் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அவர் விட்டு சென்ற கட்சியை தொடர்ந்து செயல்படுத்துகின்ற பொறுப்பும், முன்னெடுத்துச் செல்கின்ற கடமையும் நமக்கு உள்ளது. இரு அணிகளாகப் பிரிந்து, சகோதரர்கள் என்ற எண்ணத்தை மறந்து, சேற்றை வாரித் தூற்றிக்கொள்வது, கண்டன குரல்களை எழுப்புவது, தொண்டர்கள், பொதுமக்கள் ஏன் தோழமை கட்சியினர் கூட யாரும் விரும்பவில்லை.

‘உங்கள் வீட்டுக்கு வந்தால் நீ என்ன தருவாய்?’ என்று கேட்பதும், ‘நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்?’ என்ற பாணியில் ஒருங்கிணைப்பவர்கள் பேசுவதும் முரண்பாடான செயலாக உள்ளது. எனவே, தங்களுக்குள் உள்ள மனவேறுபாட்டை, கர்வத்தை மறந்து நல விரும்பிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் விரும்புவது போல் ஒன்று சேர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஆட்சியை மீதமுள்ள 4 ஆண்டுகளுக்கு தொய்வின்றி தொடர பாடுபட வேண்டும். ‘நாளை நமதே, ஆட்சியும் நமதே’ என்ற ஜெயலலிதாவின் வார்த்தைக்கு உயிரோட்டம் தருவது அனைவரின் கடமையாகும்.

‘ஒருவர் பொறை, இருவர் நட்பு’ என்ற முதுமொழிக்கிணங்க ஒருவர் பொறுத்துக்கொள்வதன் மூலம் இருவர் நட்பு நீடிக்கும் என்ற கருத்தை ஏற்று, அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதை தவறவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது'' என்று குறிப்பிட்டுள்ளார் நடராஜன்

PREV
click me!

Recommended Stories

நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?