மலேசியாவுக்குள் நுழைய முடியாத வைகோ - பின்னணியில் இலங்கை..!?

First Published Jun 9, 2017, 4:49 PM IST
Highlights
Vaiko passport revoked and not allowed to enter Malaysia


நண்பர் வீட்டு திருமணத்திற்காக மலேசியா சென்ற வைகோவுக்கு, அந்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவுக்கு ஆபத்து இழைப்பவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளது என்று அதற்குக் காரணமும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதனால் விமானநிலையத்தை விட்டு ஒரு இஞ்ச் கூட நகராத வைகோ, இன்றிரவே சென்னை திரும்புகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே, இப்படியொரு நிலைமை அவருக்கு ஏற்படவிருந்தது என்பது நாம் கவனிக்க மறந்த, நம்மை பெரு அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தகவல். 

மலேசியாவின் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு சென்னையிலிருந்து மலேசியாவுக்குக் கிளம்பினார் ம.தி.மு.க. தலைவர் வைகோ. இதற்காக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே விசா அனுமதி பெற்றிருக்கிறது அவரது தரப்பு. ஆனால், மலேசிய விமானநிலையத்தில் இறங்கிய வைகோவுக்குக் கிடைத்தது வரவேற்பல்ல; அதிர்ச்சி. 



விமானத்தில் இறங்கிய வைகோவிடம், “மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பட்டியலில் உங்களது பெயர் உள்ளது, அதனால் உங்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்றிருக்கின்றனர் அங்கிருந்த அதிகாரிகள். ’நீங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்’ என்று இதற்குக் காரணமும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘இல்லை, நான் இந்தியக் குடிமகன் தான்’ என்று தனது பாஸ்போர்ட்டை காண்பித்தபிறகும், வைகோவின் நம்பகத்தன்மையை அங்கிருந்தவர்கள் ஏற்கவில்லை. மாறாக, அவரது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டனராம். 

இந்த விவகாரத்தில் பினாங்கு துணை முதல்வர் மற்றும் முதல்வர் தலையிட்டபிறகும், சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை. ‘மலேசிய துணை பிரதமர் அலுவலகத்திலிருந்தே வந்த தகவல் இது. அதனால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று அதிகாரிகள் முரண்டு பிடிக்க,  வேறு வழியில்லாமல் இன்றிரவே இந்தியா திரும்புகிறார் வைகோ. அவரிடம் பேசக்கூட, யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது இழிவின் உச்சம். 

இந்த விஷயத்தில், மலேசிய பிரதமரோ, அங்குள்ள அரசியல் தலைமையோ, உயர் அதிகாரிகளோ, தமிழ் அமைப்புகளோ இதுவரை தங்களது கருத்துகளை வெளியிடவில்லை. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் இதே போன்றதொரு அனுபவத்தைத் தொட்டு வந்தார் வைகோ. அந்த சமயத்தில் தான் மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராஹிம் சாஹிப் அன்சர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். மலேசியாவில் வசித்துவரும் இந்திய தமிழர்கள் இதன் பின்னணியில் இருந்ததாகவும், அவர்கள் அங்குள்ள நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சில  தகவல்கள் வெளியானது. 



அப்போது மலேசியாவில் நடைபெற்ற தமிழ் அமைப்புகளின் விழாவில் பங்கேற்கச் சென்ற வைகோ, இது தொடர்பாக இப்ராஹிம் மீது நேரடியாகக் குற்றம் சாட்டினார். “கருத்தரங்கொன்றில் பங்கேற்பதற்காக மலேசியாவுக்கு வந்த ராஜபக்‌ஷேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர் தமிழர்கள். ஆனால், அதனைத் தடுத்துவிட்டார் இப்ராஹிம். அவர் இலங்கை அரசின் உளவாளி’ என்றார். 

கூடவே, தமிழ் அமைப்புகளின் கூட்டங்களில் தான் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் இப்ராஹிம் செயல்படுவதாகவும், மலேசியாவுக்குள்ளேயே தன்னை நுழையவிடாமல் தடுக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது, வைகோவின் பயணத் திட்டத்தில் சிறிதளவும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும், இலங்கை அரசின் தமிழ் விரோத நடவடிக்கை இந்தச் செய்கைகளின் பின்னால் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமான உறவு தலைமுறைகள் பல தாண்டியது என்பதால், இந்த விவகாரம் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. இன்று, அதுவே பெரிய பூதத்தை உருப்பெறச் செய்திருக்கிறது.

வைகோவின் மீது கருத்து வேறுபாடுகள் கொண்ட பல கட்சியினரும் கூட, மலேசிய அரசின் இந்த முடிவுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். “மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோ ஏன் சேர்க்கப்பட்டார் என்பதற்கு, யாரும் பதில் சொல்லப்போவதில்லை.

ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கமுடியாது என்று முடிவெடுத்துவிட்டால், அதனை இந்தியாவில் இருந்து புறப்படும்போதே தெரிவித்திருக்கலாம். மலேசிய விமானநிலையத்தில் வைத்துதான் அதனைத் தெரிவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை” என்று அவருக்கு ஆதரவான குரல்கள் பெருகிவருகின்றன. 
வைகோவுக்கு நிகழ்ந்தது தனி மனிதரின் மீதான தாக்குதல் அல்ல என்பதை, எந்தவொரு வளர்ந்த மனிதனும் அறிவான்.

தமிழ் மொழி மற்றும் இனம் மீது சர்வதேச அளவில் தாக்குதல் நிகழக்கூடும் என்ற குருட்டு வாதத்தை வலு சேர்ப்பது போலவே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது பொய்த்துப்போக வேண்டுமானால், இந்த விவகாரத்தில் தக்க தீர்வு எட்டப்பட வேண்டும். அந்த நிலை ஏற்படவில்லையென்றால், வெவ்வேறு நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுக்கக்கூடும்.. 

click me!