
இயல்பில் எவ்வளவு பெரிய வஸ்தாதுவாக இருந்தாலும் அ.தி.மு.க.வின் உறுப்பினராகிவிட்டால் வாலை சுருட்டிக் கொண்டு உட்கார வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கட்டளை. இந்த விதியை மதிக்காவிட்டால் அரசியலில் அந்த நபரின் தலைவிதியே மாறிவிடும்!
ஆனால் இவ்வளவு கட்டுப்பாட்டையும் மீறி ஜெயலலிதா இருந்தபோதே சென்னை மாநகர அ.தி.மு.க.வை தெறிக்க விட்டவர் வடசென்னை வஸ்தாதுவான எம்.எல்.ஏ. வெற்றிவேல். தினகரனின் ஆவேச ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வெற்றிவேல், டி.டி.விக்கு எதிராக செயல்படும் நபர்களை வார்த்தைகளால் வெளுத்தெடுக்கிறார்.
அரசியலில் இருந்து நகர்ந்து நில் என்று தினகரனுக்கு குடைச்சல் கொடுக்கும் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வெற்றில்வேல் வைக்கும் சூப்புகள் எல்லாம் சுரீர் ரகங்கள்தான்.
கூவத்தூரில் அத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சின்னம்மா உருவாக்கிய அமைச்சரவையில் இடம் பெற்ற பலருக்கு இன்று நன்றிக்கான அர்த்தம் விளங்காமல் போய்விட்டது. சின்னம்மா கொடுத்த பதவிகள் வேண்டும் ஆனால் கட்சியில் அவர் மட்டும் வேண்டாமா? என்று போட்டுப் பொளக்கிறார்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டி.டி.வி.யிக்கு எதிரானவர்களை விமர்சித்து தள்ளும் வெற்றிவேல் சமீபத்தில் ஓ.பன்னீரை நோக்கி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். நெத்தியடி கேள்விதான் அது...
‘’கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் அதற்கு முந்தைய ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரண்டு சமயங்களிலும் அம்மா எந்தளவுக்கு தளர்ந்து காணப்பட்டார் என்பது உலகத்துக்கே தெரியும். சிறிய மேடைக்கு கூட லிஃப் மூலமாகதான் ஏறி வந்தார். அவருக்கு உடல்நிலை எந்தளவுக்கு முடியவில்லை என்பது கழக நிர்வாகிகளான எங்களுக்கு தெரியும். ஆனால் அவரிடம் போய் ‘அம்மா உங்களால் நடக்க முடியவில்லை. அதனால் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.” என்று சொல்லிவிட முடியுமா? அந்த தைரியம் யாருக்காவது இருக்கிறதா!
பல முறை அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும், சில நிகழ்ச்சிகள் ரத்தானதும் அமைச்சராக இருந்த பன்னீருக்கு நன்றாகவே தெரியும். இதை தெரிந்து கொண்ட ஓ.பி.எஸ். என்ன செய்திருக்க வேண்டும்? உடனே ஓடிப்போய் எம்.ஜி.ஆர். சமாதியில் அமர்ந்து கொண்டு ‘அம்மா சிகிச்சை எடுத்துக் கொண்டு உடல் நலம் தேறி வரும் வரை இங்கேயே இருப்பேன்.’ என்று தியானம் செய்தபடி உட்கார்ந்திருக்க வேண்டிதானே? ஆனால் அப்போதெல்லாம் அப்படி எதையும் செய்யாத தியான திலகத்துக்கு அம்மா இறந்து, தனது பதவி போன பின் மட்டும் எங்கிருந்து ஞானம் வருகிறது?
அம்மா மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் அப்போதே எம்.ஜி.ஆர். சமாதியில் மன்றாடியிருக்கலாமே! அம்மா இறக்கும் போது இவர் தானே முதல்வர். அப்போதும், அதன் பிறகு நெடுநாளும் முதல்வராக இருந்தவருக்கு அப்போதெல்லாம் தெரியாத மர்மம், தன் பதவி பறிபோனதும் தெரிந்தது எப்படிங்க! கூடிய சீக்கிரம் அவரைப்பற்றிய ஒரு உண்மையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன். கொஞ்சம் பொறுங்கள்.” என்று சஸ்பென்ஸ் வைத்து சாடி தள்ளியிருக்கிறார்.
வீ ஆர் வெயிட்டிங் வெற்றிவேல் சார்!