
புதுக்கோட்டை அரசு விழாவில் பங்கேற்க வந்த திமுக எம்,எல்.ஏக்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜூன் 11 ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் ரூ.231 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இந்த கல்லூரி மற்றும் மருத்துவமனை 11 மாத காலத்தில் கட்டி முடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த திமுக எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விழாவில் எடப்பாடி பழனிச்சாமியுடன் எம்.எல்.ஏக்கள் வாக்குவாதம் செய்ய வந்ததால் கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விழாவில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் போனில் அழைப்பு விடுத்ததாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
விழாவில் கலந்து கொள்ள வந்த எங்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளதாகவும் திமுகவிற்கு நல்லபெயர் கிடைத்து விடக்கூடாது என எங்களை கைது செய்துவிட்டதாகவும், தெரிவித்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டை அரசு விழாவில் பங்கேற்க வந்த திமுக எம்,எல்.ஏக்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜூன் 11 ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.