
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறுவது போல் இது பினாமி அரசு இல்லை எனவும் நிலையான அரசு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முக ஸ்டாலின் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மீதும், மத்தியில் நடக்கும் ஆட்சி மீதும் மக்களுக்கு அளவிட முடியாத வெறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மாட்டிறைச்சி தடை குறித்து முதலமைச்சரிடம் கேட்டால் நான் அந்த உத்தரவை படிக்கவில்லை. படித்து விட்டு சொல்கிறேன் என்கிறார். இன்னுமா அவர் படிக்கவில்லை. அதிகாரிகள் அவரிடம் படித்து சொல்லவில்லையா? இப்படிப்பட்ட ஒரு தெம்பு இல்லாத ஒரு ஆட்சி தான் தமிழகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டினார்.
நான் செல்லும் இடங்களில் கூட, ஏன் இந்த ஆட்சியை விட்டு வைத்து இருக்கிறீர்கள்? என்றுதான் கேட்ட்பதாகவும் இந்த அரசு மத்திய அரசுக்கு பினாமி அரசாக செயல்படுவதாகவும் பேசினார்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழக அரசு நிலையாகவும் வலிமையாகவும் உள்ளது எனவும், ஸ்டாலின் கூறுவது போல இது பினாமி அரசு அல்ல எனவும் தெரிவித்தார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும், மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாட்டிறைச்சி விவகாரத்தில் விரைவில் தமிழக அரசின் நிலைப்பாடு வெளியிடப்படும் எனவும், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அழிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மக்கள் நலனுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என முதலமைச்சர் எடப்பாடி உறுதிபட தெரிவித்தார்.