அதிகாரிகளை மிரட்டினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்.. அதிமுகவை தூக்கி போட்டு குத்தும் செந்தில் பாலாஜி.

By Ezhilarasan BabuFirst Published Dec 18, 2021, 4:02 PM IST
Highlights

கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏவுமான  பி.ஆர்.ஜி அருண்குமார், காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் மிரட்டும் வகையில் பேசினார். மேடையில் பேசிய அவர், நாங்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல நாங்கள் உங்களை பார்க்காதவர்கள் ஒன்றும் அல்ல, நீ எங்கே போனாலும் நாங்கள் விடமாட்டோம், டிரான்ஸ்பர் ஆனாலும் விடமாட்டோம், 

அதிமுகவினர் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசினால் சட்ட நடவடிக்கை பாயுமென அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அதிகாரிகளை  மிரட்டும் வகையில்  பேசுவோரை அதிமுக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று திமுகவை எதிர்த்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய நிலையில் செந்தில் பாலாஜி இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எதிராக பாஜக அதிமுக ஆகிய கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.இதே நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர்  எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ். பி வேலுமணி, கே.சி வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருக்கு சொந்தமான 62 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசின் இந்த தொடர் நடவடிக்கையால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான மாநிலத்தில் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறுவாழ்வு வழங்கிட வேண்டும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் ஓ.பன்னீர்செல்வம், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, கோவை தொண்டாமுத்தூரில் எஸ்.பி வேலுமணி, நாமக்கல்லில் தங்கமணி என போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.

அதேபோல் விழுப்புரத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை என்ற பெயரில் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். யார் லஞ்ச ஒழிப்பு துறையினர்? நேற்று வரை காவல்துறையில் இருந்தவர்கள்தான், திருடர்களிடம் காசு வாங்கியவர்கள்தான், காவலர்களாக இருந்தபோது சட்டத்திற்கு புறம்பாக செயல்களில் ஈடுபட்டவர்கள்தான், அது போன்றவர்கள் தான் இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையில் இருப்பவர்கள் எல்லாரும் உத்தமர்களா? இவர்கள் எல்லாம் என்ன காந்திக்கு பக்கத்து வீட்டுக்காரர்களா? இவர்களெல்லாம் லஞ்சம் வாங்காதவர்களா? யாரிடமும் கைநீட்டி காசு வாங்காதவர்களா?  இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுகிற உயர் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை யாரும் கை நீட்டாதவர்கள் அல்ல. அவர்கள் கட்டிய வீடு எங்கிருந்து வந்தது? லஞ்ச ஒழிப்பு துறையில் இருப்பவர்களின் சொத்து எவ்வளவு? லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிகாரியாக வருவதற்கு முன் அவர்கள் டிஎஸ்பியாக இருந்தபோது, எஸ்பி ஆக இருந்தபோது அவர்களின் சொத்து மதிப்பு என்ன? 

அதேபோல அவர்கள் இந்தப் பணியை முடித்து விட்டு போகும் போது அவர்களுடைய சொத்து மதிப்பு என்ன? இதையெல்லாம் நாங்களும் கேட்போம். ஆட்சி இப்படியே இருந்து விடாது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரும், அப்போது இதே லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ளவர்களின் வீடுதேடி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை வரும். அப்போது நாங்களும் உன் சட்டையை கிழிப்போம். ஆட்சி என்பது நிரந்தரம் இல்லை, காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறேன்.என பேசியிருந்தார். இதேபோல முன்னாள் அமைச்சர் தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோரும் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் அதிமுக மாஜி அமைச்சர்கள் பேசியது விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

இதேபோல் கடந்த 7 ஆம் தேதி கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏவுமான  பி.ஆர்.ஜி அருண்குமார், காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் மிரட்டும் வகையில் பேசினார். மேடையில் பேசிய அவர், நாங்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல நாங்கள் உங்களை பார்க்காதவர்கள் ஒன்றும் அல்ல, நீ எங்கே போனாலும் நாங்கள் விடமாட்டோம், டிரான்ஸ்பர் ஆனாலும் விடமாட்டோம், கோவையில் உள்ள அரசு அதிகாரிகள் திமிர் பிடித்து அலைகின்றனர். நாங்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் அப்போது நீங்கள் எங்கு பணியில் இருந்தாலும் விடமாட்டோம்,  நீங்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம், காவல்துறை அடக்கி வாசிக்க வில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என மிரட்டும் வகையில் பேசியிருந்தார். அதிமுகவினர் தொடர்ந்து அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிவருவது பெரும் சர்ச்சையாகி உள்ளது. 

இந்நிலையில் கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுவர்களில் ஓவியம் வரையும் நிகழ்ச்சியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளரை சந்தித்து அவர், கோவை மாநகராட்சி சாலைகள் மேம்பாட்டிற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கி செய்துள்ளதாகக் கூறினார்.  முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து காழ்ப்புணர்ச்சியுடன் திமுக சோதனை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களை முன்னால் அமைச்சர் தங்கமணி வெளியிட வேண்டும், தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தான் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அதேபோல் அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசுபவரை அதிமுக கட்டுப்படுத்த வேண்டும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார். 
 

click me!