தலைமறைவான கே.டிஆர்.. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனையில் உள்ளார். ஜெயக்குமார் விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 18, 2021, 3:29 PM IST
Highlights

ஆட்சியில் இருந்தபோது பலரையும் மிக மோசமாக தரக்குறைவாக விமர்சித்து வந்த ராஜேந்திரபாலாஜி தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்து வருவதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என்று யார் சொன்னது என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அவர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார், அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவார் என கூறியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை தேடி வரும் நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என்று இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. ஜெயலிதாவின் இடத்தை இட்டு நிரப்பும் வகையில் ஈர்ப்புமிக்க தலைவர் இல்லாத காரணத்தால் அதிமுக வலுவிழந்து காணப்படுகிறது. கடந்த தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கௌரவமான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதேபோல் பத்தாண்டுகள் கழித்து அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில்  திமுக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஊழலில் ஈடுபட்டு வரும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறி வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. 

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், கே.சி வீரமணி, எஸ்.பி வேலுமணி, ஆகியோரின் இல்லம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 64 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன், கிரிப்டோ கரன்சியில் அவர் முதலீடு செய்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இதேபோல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது  தனது துடுக்கு பேச்சால் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை அவர் மிகக் கடுமையாக  விமர்சித்து வசைபாடி வந்தார். மோடி எங்கள் டாடி, எங்கள் எல்லாரையும் மோடி பார்த்துக்கொள்வார். மத்திய அரசே எங்க்கிட்ட இருக்கிறது, ஆட்சியே போனாலும் எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. மு.க ஸ்டாலின் கனவிலும் கூட முதலமைச்சராக முடியாது, அவருக்கு ஜாதகத்தில் கட்டம் சரியில்லை என பேசியது மட்டுமல்லாமல், ஸ்டாலின் அவர்களை அவன் இவன் என்று உரிமையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆவார். முன்னதாக திமுக ஆட்சி அமைத்த கையோடு ராஜேந்திரபாலாஜி வகித்து வந்த பால் வளத் துறையில் நடைபெற்ற ஊழல்களை குறிவைத்து  அதை அதிகாரிகள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் அளவுக்கு பணம் மோசடியில் ராஜேந்திரபாலாஜி ஈடுபட்டதும் அம்பமானது.

அது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் விருதுநகர் மாவட்ட குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஆவின் நிறுவனத்தில் பல கோடி ரூபாய்  அளவிற்கு அவர் ஊழல் செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதில் ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அவரை கைது செய்யும் முயற்சியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 6 தனிப்படை போலீசார் திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆனால் கே.டி ராஜேந்திர பாலாஜி இதுவரை தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் சகோதரியின் மகன்கள் வசந்தகுமார், ரமணன் மற்றும் அவரின் கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பத்தி ஏற்கனவே தகவல் தெரிவித்தார் விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகரன் ராஜேந்திரபாலாஜி எங்கு இருக்கிறார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

ஆட்சியில் இருந்தபோது பலரையும் மிக மோசமாக தரக்குறைவாக விமர்சித்து வந்த ராஜேந்திரபாலாஜி தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்து வருவதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இதுகுறித்து செய்தியாளர் சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, தலைமறைவாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். ஆனால் தான் தலைமறைவாக இருப்பதாக அவர் எப்போது கூறினார்? அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் அவர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார். ராஜேந்திரபாலாஜிக்கு அதிமுக துணை நிற்கும் எனக் கூறியுள்ளார். மேலும் தமிழுக்கு எந்த தொண்டும் ஆற்றாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்துள்ளது திமுக அரசு, உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தான் என அவர் கூறியுள்ளார். 
 

click me!