இனி ஆய்வு செய்யும் போது கழிப்பறையைத்தான் முதலில் பார்ப்பேன்… அன்பில் மகேஷ் திட்டவட்டம்!!

By Narendran SFirst Published Dec 18, 2021, 2:52 PM IST
Highlights

பள்ளிகளில் ஆய்வு செய்து மோசமான பள்ளிக் கட்டிடங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

பள்ளிகளில் ஆய்வு செய்து மோசமான பள்ளிக் கட்டிடங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நெல்லை டவுன் பகுதியில் சாஃப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 11 மணிக்கு பள்ளி இடைவேளை விட்ட நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காகக் கழிப்பறை மாணவர்கள் மீது தடுப்புச் சுவர்இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். பிரேதப் பரிசோதனைக்காக 3 பேரின் உடலும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து உடலை வாங்க உறவினர்கள் மறுப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உடல்களைப் பெற்றுக் கொண்டனர். 100 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காரில் செல்லும் போது அரசுப் பள்ளிகளைப் பார்த்தால், ஆய்வுக்குச் செல்வேன்.

அவ்வாறு ஆய்வு செய்யும்போது கழிப்பறையைத்தான் முதலில் பார்ப்பேன். இதை ஏற்கெனவே பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். கழிப்பறை சுத்தம்தான் முதலில் முக்கியம். பள்ளிகள் திறக்கப்படும்போதே கழிப்பறைகள், மின்சார இணைப்புகளைத்தான் முதலில் பரிசோதிக்க உத்தரவிட்டு இருந்தோம். இனி நெல்லை பள்ளி சம்பவம் போன்று நடக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம். இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்அடித்தளம் இல்லாமல் கழிப்பறை சுற்றுச்சுவர் கட்டியிருந்ததால்தான் பள்ளி கட்டிடம் இடிந்துள்ளது. நெல்லையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்குக் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இழப்பை ஈடு செய்யமுடியாது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பதால், எந்தப் பள்ளிகளையும் தவறவிடாமல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நோட்டீஸை ஒட்டவும் அறிவுறுத்தி இருக்கிறோம். இத்தகைய ஆய்வைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளோம். பள்ளிகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்கள், செடிகள் வளர்ந்துள்ள கட்டிடங்கள், விரிசல் விட்டுள்ள கட்டிடங்களின் விவரங்களைக் கோரியுள்ளோம். அதை அடிப்படையாகக் கொண்டு பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்படும். அத்தகைய கட்டிடங்களுக்கு மாற்றாக, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைத்துக் கற்பிக்கத் திட்டமிட்டு வருகிறோம். அதேபோல பொதுவான ஓர் இடத்தை  வாடகைக்கு எடுத்து, கற்பிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. பள்ளிகள் மீண்டும் கட்டப்படும்வரை கற்பித்தலை நிறுத்த முடியாது. ஒவ்வொரு மண்டலமாகத் தேர்வு செய்து பள்ளிகள் ஆய்வு செய்யப்படும். மிக விரைவில் அதற்கான நடவடிக்கை நடக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

click me!