நாங்களும் ஆட்சிக்கு வருவோம்.! நீ எந்த ஊர்ல இருந்தாலும் விட மாட்டோம்.. இன்ஸ்பெக்டரை மிரட்டிய அதிமுக MLA .

By Ezhilarasan BabuFirst Published Dec 8, 2021, 12:10 PM IST
Highlights

நாங்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் அப்போது நீங்கள் எங்கு பணியில் இருந்தாலும் விடமாட்டோம்,  நீங்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம், காவல்துறை அடக்கி வாசிக்க வில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும்.

நாங்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம், நீ எந்த ஊருக்கு சென்றாலும் நாங்கள் உன்னை விடமாட்டோம் என அதிமுக எம்எல்ஏ காவல் ஆய்வாளரை மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்ட மேடையிலேயே அவர் இவ்வாறு பேசியுள்ள  வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தின்போது வாகனங்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் முயன்றதை அடுத்து காவல்துறைக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில்  அவர் காவல் ஆய்வாளரை இவ்வாறு விமர்சித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக  ஆட்சி அமைத்துள்ளது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும் பெற்று வருகிறது.  கொரோனா தொற்று காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் கடந்த மழை  வெள்ளத்தில் துரிதமாக அரசு செயல்படவில்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றவில்லை என்றும் மற்ற மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தும் தமிழக அரசு ஏன் அதை குறைக்க வில்லை என்றும் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகின்றன.  இந்த பரபரப்புக்கு மத்தியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அரசு அதிகாரிகளையும் காவல் ஆய்வாளரையும் மேடையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை ஓசூர் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நேற்று மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி வேலுமணி  முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஏழு மாதங்கள் ஆகியும் திமுக மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வில்லை எனவும் அதை கண்டித்து வரும் 9 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும், அதிமுக அமைப்பு தேர்தலை முறையாக நடத்துவது, மற்றும் நகராட்சி மன்ற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி என்பன உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான அதிமுக தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்தனர். அப்போது ஏராளமான இருசக்கர வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் இருந்தால் அங்கு வந்த போலீசார் அந்த வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்றும்  இல்லையென்றால் வாகனங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.

"

அப்போது போலீசாருக்கும் அங்கிருந்த அதிமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாகனங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது அப்புறப்படுத்த கூடாது என வலியுறுத்தி போலீசாரை கண்டித்து அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார். இதனையடுத்து கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏவுமான  பி.ஆர்.ஜி அருண்குமார், காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் மிரட்டும் வகையில் பேசினார். அப்போது மேடையில் பேசிய அவர், நாங்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல நாங்கள் ஒன்றும் உங்களை பார்க்காதவர்கள் அல்ல நீ எங்கே போனாலும் நான் விடமாட்டோம் டிரான்ஸ்பர் ஆனாலும் விடமாட்டோம், கோவையில் உள்ள அரசு அதிகாரிகள் திமிர் பிடித்து அலைகின்றனர். 

நாங்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் அப்போது நீங்கள் எங்கு பணியில் இருந்தாலும் விடமாட்டோம்,  நீங்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம், காவல்துறை அடக்கி வாசிக்க வில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும். நாங்களும் ஆம்பளைங்கதான். ஒழுங்கா நியாயத்துக்கு கட்டுப்பட்டு இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்போம், அதை தவிர்த்து எங்கள் தொண்டர்களை மிரட்டுவது வழக்கு போடுவேன் என்று சொல்வதே போன்றவை எல்லாம் கூடாது என அவர் எச்சரித்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேச்சை  பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர்.
 

click me!