அரசு விழாவில் ராகுல் காந்தி படம் இருக்கு, ஆனால் பிரதமர் மோடி படம் இல்லை’ என்று கொந்தளித்து இருக்கிறார்கள் பாஜகவினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரூ.2.20 கோடி மதிப்பில் புதிதாக ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம், கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை விருத்தாசலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் திறந்து வைப்பதற்காக வருகை தந்தார். அப்போது, அந்த அரசு கட்டிடத்தில் அம்பேத்கர், காந்தி புகைப்படங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த படங்களுடன் காங்கிரஸ் முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த பாஜகவின் மாவட்டத் துணைத் தலைவரும், விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலருமான செந்தில்குமார், அரசு அதிகாரிகளிடம் ‘அனைத்து தேச தலைவர்கள் படத்தை வைத்த நீங்கள், எதற்காக தற்போது பிரதமர் படத்தை ஏன் வைக்கவில்லை, அரசு விழாவில் ராகுல் காந்தியின் புகைப்படத்தை எதற்காக வைத்தீர்கள் ? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதனால் அங்கிருந்த பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் உண்டானது. இதனால் அந்த இடமே சிறிது நேரத்துக்கு போர்க்களம் போல பரபரப்புடன் காணப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அரசு விழாவில் காங்கிரஸ் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், அவதூறு வார்த்தைகள் பேசுவதாகவும், காவல் துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் பாஜக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர். மேலும், அரசு விழாவில் ராகுல்காந்தியின் புகைப்படத்தை வைப்பதற்கு அரசு அதிகாரிகளே உறுதுணையாக உள்ளார்கள் என்றும், துறை ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு மாவட்ட பதிவுத் துறை அலுவலர் பரமேஸ்வரி மற்றும் விருத்தாச்சலம் சார் பதிவாளர் வேல்முருகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராகுல் காந்தி படத்தை வைப்பீர்கள்,மோடி படம் வைக்கமாட்டீர்களா ? என்று சண்டைபோட்டுக்கொண்ட இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.