ராசா மன்னிப்பு கேக்கலன்னா வீட்டை முற்றுகையிடுவோம்... திமுகவுக்கே சவால் விட்ட பாஜக மகளீர் அணி.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2022, 8:08 PM IST
Highlights

இந்து மதத்தைப் பற்றி அவதூறாக பேசிய ஆ. ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை பாஜக மகளிரணி சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என மகளிர் அணி பொதுச் செயலாளர் நதியா சீனிவாசன் எச்சரித்துள்ளார்.

இந்து மதத்தைப் பற்றி அவதூறாக பேசிய ஆ. ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை பாஜக மகளிரணி சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என மகளிர் அணி பொதுச் செயலாளர் நதியா சீனிவாசன் எச்சரித்துள்ளார். திமுக எம்.பி ஆ. ராசா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த அவர் இவ்வாறு கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுக்கும்- திமுகவுக்கும் இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. திமுக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் பாஜகவினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை  ஒவ்வொருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறி வருகிறார். 

அதே நேரத்தில் அடிக்கடி ஆளுநரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார், ஆளுநருக்கும்- தமிழக அரசுக்கும் இடையேயான மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திமுக அரசு இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் எதிரானது என தொடர்ந்து பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். விநாயகர் சதூர்த்தி பண்டிகையின் போது கூட முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு ஏன் வாழ்த்து கூறவில்லை என பாஜகவினர் கேள்விகளை எழுப்பி வந்தனர். 

இந்நிலையில் சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆ. ராசா  இந்துமதம் குறித்து கடுமையாக விமர்சித்தார். அதாவது இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன் தான், இந்துவாக இருக்கும் வரை நீ தாழ்த்தப்பட்டவன்தான், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்தான், எனவே சூத்திரன் என்றால்  வேசியின் பிள்ளை என்று பொருள், அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் வேசியின் மகன்களாக இருக்க விரும்புகிறீர்கள். இப்படித்தான் இந்து மதம் சொல்கிறது என இந்து மதம் குறித்து அவர் விமர்சித்தார்.

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய ஆ . ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராசாவை திமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் அவருக்கு எதிராக காவல் நிலையங்களிலும் பாஜகவினர் புகார் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக பாஜகவில் மகளிர் அணி பொதுச் செயலாளர் நதியா சீனிவாசன் ஆ. ராசா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார் திடலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி ராசா இந்து மதத்தை பற்றி மிக அவதூறான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்,

இந்துக்கள் பற்றி அவதூறான கருத்தை நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக ராசா கூறியதிலிருந்தே அவரது சட்ட அறிவு சுத்தமாக இல்லை என்பது தெரிய வருகிறது. அவரின் பேச்சு இந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை கருத்து எதுவும் கூறாமல் இருந்து வருகிறார், அப்படி என்றால் ராசாவின் கருத்தை முதலமைச்சர் ஏற்றுக் கொள்கிறாரா? இல்லையென்றால் அவர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

இந்துக்கள் குறித்து அவதூறாக பேசும் இவர்களுக்கு இந்துக்களின் வாக்கு மட்டும் இனிக்கிறதா? இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவே மன்னிப்பு கேட்கவேண்டும், மன்னிப்பு கேட்காத பட்சத்தில் அவரது வீட்டை பாஜக மகளிரணி சார்பில் முற்றுகையிடுவோம் என அவர் கூறினார்.
 

click me!