ஒரே நாளில் மழை வெள்ள நீரை அகற்றினோம்.. காலரைத் தூக்கிவிடும் அமைச்சர் கே.என். நேரு..!

By Asianet TamilFirst Published Nov 17, 2021, 10:11 PM IST
Highlights

சென்னை மாநகரம் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தது. சென்னையைப் போலவே பல்வேறு நகரங்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த பகுதிகளில் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

ஒரு சில இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் ஒரே நாளில் தண்ணீரை அகற்றினோம் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். 

சேலத்தில் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் மழை அதிகமாக பெய்துள்ளது. சென்னை மாநகரம் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தது. சென்னையைப் போலவே பல்வேறு நகரங்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த பகுதிகளில் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.  ஆய்வு செய்தார். சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் உயிரிழந்தார்கள். ஆனால், இந்த முறை அதே அளவுக்கு மழை பெய்திருக்கிறது. என்றாலும்கூட 3 பேர்தான் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களும் உடல் நலமின்மை காரணமாகத்தான் உயிரிழந்தனர்.

ஒரு சில இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் ஒரே நாளில் தண்ணீரை அகற்றினோம். பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டுகொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை எல்லாம் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். முதல் கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ளார். சாலைகளைச் சீரமைக்க ரூ.300 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

நகராட்சி நிர்வாக துறைக்கு பேரிடர் தொகையாக ரூ.300 கோடியை வழங்கி இருக்கிறார். இந்த வெள்ளத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார். ஒருவர் 5 ஆண்டு காலம் ஒரே இடத்தில் குடியிருக்கிறார் என்றால் அந்த இடத்துக்கு அவருக்கு பட்டா வழங்க வேண்டும் என கருணாநிதி ஏற்கனவே கூறி இருக்கிறார். எனவே, உங்களிடம் மக்களிடம் பெற்ற மனுக்களுக்கு உரிய முறையில் பரிசீலித்து நல்ல தீர்வு மாவட்ட நிர்வாகம் வழங்கும்.” என்று கே.என். நேரு தெரிவித்தார். 

click me!