தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி விட்டதா பாஜக..? அதிமுகவுக்கு திகிலூட்டிய அண்ணாமலை..!

By Asianet TamilFirst Published Nov 17, 2021, 8:12 PM IST
Highlights

“பாஜக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் இணைந்து எங்களுடைய பணிகளை செய்கிறோம், நீங்கள் கேட்டது மக்களுடைய கருத்து” 

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னேறுகிறதா என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அண்ணாமலை பார்வையிட்டார். தோவாளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, புயல், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். தற்போது அவரே ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 8 ஆயிரம் மட்டுமே அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. காரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதால் மக்கள் பிரச்சினைகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது.” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

பின்னர் அண்ணாமலையிடம் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தமிழகத்தில் பாஜக முன்னேறுகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “பாஜக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் இணைந்து எங்களுடைய பணிகளை செய்கிறோம், நீங்கள் கேட்டது மக்களுடைய கருத்து” என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவை ஒவ்வொரு விஷயத்திலும் பாஜக விடாமல் விமர்சனம் செய்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் திமுக அரசுக்கு எதிராக தொடர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, பாஜக முன்னேறுகிறதா என்ற கேள்விக்கு, அது மக்கள் கருத்து என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
 

click me!