ஆரம்பத்திலேயே சொன்னோம் கேலி செய்தீர்கள்... இப்போதும் கொரோனாவை உணரவில்லை... மு.க.ஸ்டாலின் காட்டம்..!

By Thiraviaraj RMFirst Published May 19, 2020, 6:16 PM IST
Highlights

மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, திமுக துணை நிற்கும் என, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, திமுக துணை நிற்கும் என, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.

இதுகுறித்து, இந்தியப் பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை என்னுடைய கவனத்திற்கும் கொண்டு வந்து, அச்சு ஊடகங்கள் வழக்கம்போல மக்களின் குரலாக செயல்படுவதற்கு திமுக துணை நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளினை நேரில் தெரிவிப்பதற்காக மூத்த பத்திரிகையாளர்கள் 'இந்து' என்.ராம் ஆகியோர் சந்தித்து, கோரிக்கைக் கடிதத்தை அளித்தனர்.

நோய்த் தொற்று குறித்தும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், சமூக வலைதளத்தின் பரப்பு அதிகரித்துவரும் இந்தக் காலத்தில், மக்களிடம் உண்மைச் செய்திகளை, நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் தேவை மிகவும் அதிகம்.

அவை நெருக்கடிக்குள்ளாவதிலிருந்து மீளும் வகையில், மத்திய அரசு, பத்திரிகை அச்சுக் காகிதம் மீதான வரியைக் குறைக்க வேண்டும்; அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும்;  காலத்தின் தேவை கருதி அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும். இவைதான் பத்திரிகைத் துறையின் முக்கியமான கோரிக்கைகள்.

பிரதமர் நரேந்திர மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைகள் நிறைவேறிட திமுக துணை நிற்கும் என்ற உறுதியினை அவர்களிடம் வழங்கியதுடன், கரோனா தொற்றுப் பரவல், ஊரடங்கு நிலைமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒன்றிணைவோம் வா' திட்டம் மூலமாக திமுக செய்துள்ள, செய்துவரும் பணிகளையும் எடுத்துரைத்தேன். மக்களின் பட்டினிச் சாவினைத் தடுத்திடும் நோக்கத்துடன் உணவும் உணவுப் பொருட்களும் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தைத் தொடங்கி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 17 லட்சம் அழைப்புகளைப் பெற்று, அவற்றை நிறைவேற்றியுள்ளோம்.

165 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களின் பசியாற்றிடும் வகையில், 36 நகரங்களில் 28 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மக்களுக்கு முழுமையான பலன் தந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், வணிகர்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் உள்படப் பலருடனும் 50 முறைக்கு மேல் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியதையும் அவர்களிடம் தெரிவித்தேன்.

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்போதும் மக்கள் பக்கம் நின்று அவர்தம் நலனைப் பாதுகாக்கின்ற இயக்கம் என்பதற்கு இந்தப் பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்துக்காட்டிய அதேவேளையில், மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுகின்ற கட்சிகள், தாங்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய நடவடிக்கைகளில் காட்டிய அலட்சியத்தையும், தாமதத்தையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நடுநிலை தவறாத அச்சு ஊடகங்களான பத்திரிகைகள்தான் தொடர்ந்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதையும் எடுத்துரைத்து விளக்கினேன்.

2020 ஜனவரி கடைசி வாரத்திலேயே கரோனா தொற்று கேரளாவுக்கு வந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன்பே, உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பி இருந்தது. ஆனால், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்புக்கான ஏற்பாடுகளில் முதன்மையான கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். பிப்ரவரி 3-வது வாரத்தில் டிரம்ப்பை அகமதாபாத் அழைத்துச் சென்று, 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற பெயரில், லட்சக்கணக்கான மக்களைக் கூட்டி, மாபெரும் வரவேற்பு கொடுத்தார்.

மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கரோனா விழிப்புணர்வு குறித்துப் பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. மாநிலங்களவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், முகக்கவசம் அணிந்திருந்ததைக் கண்ட சபாநாயகர் வெங்கய்ய நாயுடு, அந்த உறுப்பினர்கள் முகக்கவசத்தை அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் அவையைத் தொடர்ந்து நடத்த முடியாது என்றும் உத்தரவிட்டார். மாநில அரசும் இதேபோன்ற அலட்சியத்துடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்தி வந்தது.

திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் கரோனா குறித்து எச்சரிக்கை செய்தபோது, கரோனா இங்கில்லை; அப்படியே வந்தாலும், இதய மற்றும் நீரிழிவு நோயாளிகளை மட்டுமே அது தாக்கும் என்றார்கள். திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களான எங்களைக் கேலி செய்தார்கள். எதிர்க்கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன், முகக்கவசம் வேண்டும் என்று கேட்டபோது, அவரை முதல்வரே கேலி செய்தார்.

நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தபோதும், அதை கரோனா எச்சரிக்கையாக, அதிமுகவினர் எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர், அவையைப் புறக்கணித்தோம். திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளுக்குப் போய் மக்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன். அதற்குப் பிறகுதான் அவசரம் அவசரமாக மானியக் கோரிக்கைகள் அனைத்தையும் ஒரே நாளில் நிறைவேற்றிவிட்டு, அவையை ஒத்தி வைத்தார்கள்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் என்னென்ன குளறுபடிகளைச் செய்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. பரிசோதனைகள் குறித்து தினந்தோறும் மாவட்ட வாரியான விவரங்களை வெளியிட வேண்டும் என்று பலமுறை கேட்டுவிட்டேன். இதுவரை வெளியிடப்படவில்லை. அதில் என்ன மர்மம்? ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால், இன்று தமிழ்நாடு, கரோனா பாதிப்பில், மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது மாநிலமாக ஆகிவிட்டது. முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், சிசுக்கள் எனப் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.

கரோனாவின் காரணமாக நசிந்துபோய்விட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்க, 'சுயச் சார்பு பாரதம்' என்ற தலைப்பில் பிரதமர், 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என்று நாட்டு மக்களுக்குப் பிரகடனம் செய்தார். அதை ஒட்டி நான்கைந்து நாட்களாக மத்திய நிதி அமைச்சர் தொடர்ந்து, திட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும், மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களையும், அறிவித்திருக்கிறார்.

அந்த அறிவிப்புகளைக் கூட்டிக் கணக்குப் பார்த்து, பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு, ஜிடிபியில் 10 சதவிகிதம் அல்ல; வெறும் 0.91 சதவிகிதம்தான் என்று மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். வேறு பல 'ரேட்டிங்' நிறுவனங்களும், ஏறத்தாழ சிதம்பரம் சொல்லியிருப்பதை உறுதி செய்திருக்கின்றன. நிவாரண உதவியாக ஒவ்வொருவர் கையிலும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அதிமுக அரசிடம் பல முறை கேட்டுப் பார்த்துவிட்டோம். அகில இந்திய காங்கிரஸ் கட்சி 7,500 ரூபாய் வீதம் 13 கோடி குடும்பங்களுக்கு நிவாரணமாகக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பல முறை கோரிக்கை வைத்துவிட்டார்கள்.

மாநிலத்தை ஆள்கின்ற அதிமுக அரசோ, மத்தியில் உள்ள பாஜக அரசோ, மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவை உணர்ந்ததாகத் தெரியவில்லை; மக்களுக்கு உதவிட அவர்களுடைய மனம் இரங்கவில்லை, தெளிவான திட்டமும் செயல்பாடுகளும் இல்லை என்பதைப் பத்திரிகையாளர்களிடம் எடுத்துரைத்து, இவற்றை அச்சு ஊடகங்கள் முழுமையாக வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களுக்கு உதவிகள் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்தேன்.

மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகப் பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, திமுகவின் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நிச்சயம் துணை நிற்பார்கள். பிரதமரிடம் இதனை வலியுறுத்துவார்கள் என்ற உறுதியினையும் வழங்கினேன்’’என அவர் தெரிவித்துள்ளார். 

click me!