எங்களால் ஜீபூம்பா வேலையெல்லாம் செய்ய முடியாது.. வழிமறித்த மக்களிடம் எகிறிய அமைச்சர்..!

By Asianet TamilFirst Published Nov 21, 2021, 9:48 AM IST
Highlights

வெள்ளம் வடியாத நிலையில், “நீங்கள் ஆய்வு செய்ய வேண்டாம். ஆய்வு செய்துவிட்டு நீங்கள் காரில் ஏறி சென்றுவிடுவீர்கள். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாங்கள்தான் கஷ்டப்படுகிறோம்” என்று ஆவேசப்படார்கள்.

வெள்ளப் பாதிப்பை பார்வையிட வந்த அமைச்சரை வழிமறித்த மக்களிடம், ‘எங்களால் ஜீபூம்பா வேலை எல்லாம் செய்ய முடியாது’ என்று தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கோபமடைந்தார்.

வட கிழக்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் மட்டும் அல்லாமல் உட்புற மாவட்டங்களும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. திருப்பத்தூர் மாவட்டமும் கடும் பாதிப்பைச் சந்திள்ளது. பல கிராமங்களில் வெள்ளம் சூழந்து, அது இன்னும் வடியாமலேயே உள்ளது. இந்நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலும் திருப்பத்தூரில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களை ஆய்வு செய்ய வந்தார்.

ஜோலார்பேட்டை அருகே உள்ள என்.ஜி.ஓ. நகரில் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்யவந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள், காரை வழிமறித்து அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெள்ளம் வடியாத நிலையில், “நீங்கள் ஆய்வு செய்ய வேண்டாம். ஆய்வு செய்துவிட்டு நீங்கள் காரில் ஏறி சென்றுவிடுவீர்கள். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாங்கள்தான் கஷ்டப்படுகிறோம்” என்று ஆவேசப்படார்கள்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “எங்களால் ஜீபூம்பா வேலையெல்லாம் செய்ய முடியாது. எவனெவன் அரசாங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்களோ அதையெல்லாம்  அகற்ற வேண்டும். இரண்டு நாளாவது ஆகும். பிறகுதான் தண்ணீர் வடியும்” என்று சொன்ன அமைச்சர், அதுவரை மூன்று வேளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டு, அங்கிருந்து சென்றார்.

click me!