தெலுங்கு தேசம் பார்ட்டியை தட்டி தூக்குகிறார் ஜூனியர் என்.டி.ஆர்..! ஜெகன் மோகன் ரெட்டிக்கு எச்சரிக்கை.!

By Asianet TamilFirst Published Nov 20, 2021, 11:19 PM IST
Highlights

1995-இல் என்.டி.ராமாராவிடம் இருந்து தெலுங்குதேசத்தை சந்திரபாபு நாயுடு கைப்பற்றினார். அவர் பாணியில் தெலுங்குதேசத்தைக் கைப்பற்றி, ஜெகன் மோகன் ரெட்டிக்குப் போட்டியாக உருவெடுப்பார் என்று ஆந்திர அரசியலில் பலமாக பேச்சுகள் அடிபடுகின்றன.

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கதறி அழுத விவகாரத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பத்திரிகையாளர் சந்திப்பில் கதறி அழுதது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் தன்னுடைய மனைவியைப் பற்றி தகாத முறையில் விமர்சித்தார்கள் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறிக்கொண்டிருந்தபோது, அதைத்தாங்க முடியாமல் வெடித்து அழுதார். அவருடைய பேட்டியை நேரலையிலும் பின்னர் தொலைக்காட்சிகளிலும் பார்த்த ஆந்திர மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மத்தியில் சந்திரபாபு நாயுடுவின் அழுகை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சந்திரபாபுவுக்கு பல தரப்பினரும் நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடைய நெருங்கிய உறவினரான நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். காணொலி காட்சி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து கடும் ஆட்சேபனையை ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ஜூனியர் என்.டி.ஆர். எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த காணொலியில் அவர் பேசுகையில், “அரசியல்வாதிகள் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடுவதைவிட பொதுப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அரசியலில் விமர்சனங்களும் எதிர் விமர்சனங்களும் பொதுவானவைதான். ஆனால், சட்டப்பேரவையில் குடும்பப் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் என்பது மாநிலத்தில் அராஜக ஆட்சி என்பதைக் காட்டுகிறது. நம் நாட்டில் பெண்களை மதிப்பது என்பது நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இந்த எபிசோட் விரைவில்  முடிவடையும் என்று நான் நம்புகிறேன்” என்று ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி பெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறார். அவருடைய தந்தை ஒ.எஸ்.ராஜசேகர ரெட்டியுடன் அரசியல் செய்த சந்திரபாபு நாயுடுவால், தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே, ஜெகன் மோகன் ரெட்டிக்கு செக் வைக்க என்.டி,ராமாராவ் குடும்பத்திலிருந்து நடிகர் ஜூனியர் என்.டிஆர். களமிறக்கப்படுவார் என்று ஆந்திர வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர். அரசியலில் குதிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே 1995-இல் என்.டி.ராமாராவிடம் இருந்து தெலுங்குதேசத்தை சந்திரபாபு நாயுடு கைப்பற்றினார். அவர் பாணியில் தெலுங்குதேசத்தைக் கைப்பற்றி, ஜெகன் மோகன் ரெட்டிக்குப் போட்டியாக உருவெடுப்பார் என்று ஆந்திர அரசியலில் பலமாக பேச்சுகள் அடிபடுகின்றன.

click me!