இந்தியா இன்னும் சுதந்திரமே பெறல... தொடரும் பாலியல் குற்றங்களால் மனவேதனையில் துடிக்கும் கேப்டன் விஜயகாந்த்.!

By Asianet TamilFirst Published Nov 20, 2021, 10:28 PM IST
Highlights

பெண்கள் எவ்வித அச்சமுமின்றி என்றைக்கு நள்ளிரவில் தனியாக நடந்து செல்கிறார்களோ அன்றைக்குதான், இந்தநாடு உண்மையான சுதந்திரம் பெற்றது என்ற காந்தியடிகளின் கூற்றுபடி பார்த்தால் இந்தநாடு இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்றே கருத வேண்டும்.

பாலியல் வன்முறைகள் மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்றும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடுமையான சட்டத்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் சீண்டல்கள் காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலைகள் செய்துகொண்டது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அண்மையில் கோவை மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக  பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் வடு இன்னும் ஆறாத நிலையில், கரூரில் மேலும் ஒரு மாணவி பாலியல்  வன்கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதியுள்ள கடிதத்தில், ‘பாலியல் தொல்லையால் இறக்கும் கடைசி பொண்ணு, நானாகதான் இருக்கனும்’ என குறிப்பிட்டுள்ளார்.  ‘என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழரத்துக்கு ஆசைப்பட்டேன், ஆனா,  இப்போ பாதியிலேயே போரேன்’ என அந்த கடிதத்தில் மாணவி உருக்கமாக எழுதியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் கண்டனத்துக்குரியது. மாணவிகள் தற்கொலை முடிவு எடுக்காமல், இதற்கு யார் காரணமோ அவர்களை எதிர்க்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு பெற்றோர்கள், தோழிகள், ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். 

மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை காவல்துறை அடையாளம் கண்டு கடும் தண்டனை வழங்க வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் திண்டுக்கல்லில் செவிலியர் கல்லூரி பாலியல் வன்கொடுமையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் எவ்வித அச்சமுமின்றி என்றைக்கு நள்ளிரவில் தனியாக நடந்து செல்கிறார்களோ அன்றைக்குதான், இந்தநாடு உண்மையான சுதந்திரம் பெற்றது என்ற காந்தியடிகளின் கூற்றுபடி பார்த்தால் இந்தநாடு இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்றே கருத வேண்டும். இதுபோன்ற பாலியல் வன்முறைகள் மிகுந்த மன வேதனை அளிக்கிறது , இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடுமையான சட்டத்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.” என்று அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

click me!