இப்போ வந்து துள்ளாதீங்க... நாங்க மட்டும் இல்லைனா நீங்க இல்ல... சிவசேனாவுக்கு பாஜக பதிலடி..!

By Thiraviaraj RMFirst Published Jan 24, 2022, 4:57 PM IST
Highlights

மஹாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, பாஜகவின் சந்தர்ப்பவாத இந்துத்துவம், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு என்பதைப் புரிந்து கொண்டேன். 

பாஜக உடன் கூட்டணி அமைத்து, 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்து விட்டதாக விமர்சித்திருந்த மஹாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

சிவசேனா கட்சி நிறுவனரான பால் தாக்கரேவின் 96வது பிறந்தநாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சித் தலைவரும், மஹாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, பாஜகவின் சந்தர்ப்பவாத இந்துத்துவம், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு என்பதைப் புரிந்து கொண்டேன். சிவசேனா 25 ஆண்டுகளை பாஜகவுடன் கூட்டணி வைத்து வீணடித்து விட்டது. கூட்டணி கட்சிகளை நம்ப வைத்து ஏமாற்ற வைப்பது தான் பாஜகவின் குறிக்கோள் என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இந்தக் கருத்துக்கு, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்து உள்ளார்.

இது தொடர்பாக, மும்பையில் செய்தியாளர்களிடம் தேவேந்திர பட்னவிஸ், ‘’மும்பையில் பாஜக இருந்த நேரத்தில் சிவசேனா கட்சியே உதயமாகவில்லை என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எங்களுடன் கூட்டணியில் இருந்த போது சிவசேனா நம்பர் ஒன் அல்லது நம்பர் 2 கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது அவர்கள் 4வது இடத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் பால் தாக்கரேவுக்காக சமூக வலைதளத்தில் பதிவிடுவார்களா? என சிவசேனா கட்சியினருக்கு நான் சவால் விடுகிறேன். ராமர் கோவில் இயக்கத்தின் போது நீங்கள் பேச்சு மட்டுமே கொடுத்தீர்கள். நாங்கள் தோட்டாக்களையும், தடியடிகளையும் எதிர் கொண்டோம்’’ என அவர் தெரிவித்தார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி போட்டியிட்டது. தேர்தலில், இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், முதலமைச்சர் பதவி வேண்டும் என்று சிவசேனா கட்சி பிடிவாதமாக இருந்தது.

ஆனால், பாஜகவோ, முதலமைச்சர் பதவி தர முடியாது என்றும், வேண்டுமானால், துணை முதலமைச்சர் பதவி தருகிறோம் என்றும் தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடித்தது. முதலமைச்சராக, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். சிவசேனா கட்சியில் இருந்து முதலமைச்சராக ஒருவர் பதவி ஏற்பது இதுவே முதன்முறை. இப்படி தான் மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி ஆட்சியை பிடித்தது.

click me!