தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.. ஆட்சியைத் தட்டித் தூக்குறோம்.. டாப் கியரில் டாக்டர் ராமதாஸ்..!

By Asianet TamilFirst Published Nov 23, 2021, 9:09 AM IST
Highlights

இதற்காக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யுங்கள். சமூக ஊடகம் மூலமாகவும் பிரசாரம் செய்யுங்கள். 10 பேராக சென்று பிரசாரம் செய்யுங்கள்.

வருகிற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பாக பேசியிருக்கிறார்.  

கொரோனா காரணமாக பொதுஇடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தற்போதுதான் மீண்டும் தலைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு, திண்டிவனத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ், நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் பங்கேற்றார். இக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், “புதுச்சேரியின் பிராந்திய பகுதிகளான காரைக்கால், மாஹி, ஏனாம் போன்ற பகுதிகளுக்கெல்லாம் சென்று கட்சியை வளர்த்தேன். ஆனால், இன்று யார் யாரோ வளர்ந்து ஆளாகிறார்கள். அவர்களை எல்லாம் நான் குறை சொல்லவில்லை.  நாம் தனியாகப் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது.

புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம்தான். ஆனால் குறைந்தப்பட்சம் 4 அல்லது 5 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்குக்கூட வேலை செய்யவில்லை. கடந்த காலத்தில் புதுச்சேரி வரலாற்றை பார்க்கும்போது எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதெல்லாம் தெரிகிறது. இப்போதும்கூட புதுச்சேரியை அப்படியே விட்டுவிட்டீர்களே எனத் தொலைபேசியில் என்னிடம் சிலர் கேட்பதுண்டு. பாமக கூட்டணியில் இருந்தாலும்கூட நளினமாக திமுகவை விமர்சனம் செய்வேன். அதற்கு கலைஞர் கருணாநிதி தைலாபுரத்திலிருந்து தைலம் வருகிறது எனப் பதில் சொல்வார்.

அதுபோலத்தான் புதுச்சேரிக்கு அதிக அளவில் தைலம் அனுப்பினேன். அதனால் ஒரு பயனும் இல்லை. புதுச்சேரியில் என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள். ஆனால், பாதுகாவலர்களால் தப்பித்தேன். நான் நிர்வாகிகளை கேட்டுக்கொள்வது எல்லாம் பாமக புத்துயிர் பெற வேண்டும்.  புதுச்சேரியில் 3 தொகுதிகள், காரைக்காலில் 2 தொகுதிகள் என 5 எம்.எல்.ஏ.க்களை பாமக பெற வேண்டும். இதற்காக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யுங்கள். சமூக ஊடகம் மூலமாகவும் பிரசாரம் செய்யுங்கள். 10 பேராக சென்று பிரசாரம் செய்யுங்கள். வருகிற தேர்தலில் புதுச்சேரியில் பாமக தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம்.” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார். 

தமிழகத்தில் 60 தொகுதிகளை வென்றால், ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று பேசிவரும் டாக்டர் ராமதாஸ், புதுச்சேரியிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!