‘மு.க ஸ்டாலின் நம்பர் 1 ஆக இருப்பதை போலவே, தமிழ்நாடும் நம்பர் 1 ஆக வர வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
நேற்று திருப்பூரில் நடைபெற்ற ‘அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு’ மற்றும் ‘ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்’ இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதில் தமிழக ஏற்றுமதி தொழில் துறைக்கு 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தக இலக்கு நிர்ணயித்து, அதற்கான திட்டங்களை வகுத்தமைக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
அண்மையில் நடைபெற்ற ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு மாநாட்டில், “தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை” வெளியிட்டது ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்கள்முதல்வர் ஸ்டாலினின் நல திட்டங்கள் மேலும் தொடர் வேண்டும் என்று பாராட்டினர்.
அப்போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், ‘ நீங்கள் சொன்ன பிரச்சனை மட்டுமல்ல, புதிய பிரச்சனைகள், தீர்க்க முடியாமல் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள், எதுவாக இருந்தாலும் எந்தநேரமும் இந்த அரசை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நம்முடைய தொழில் துறை அமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள், தொழில்துறை செயலாளர் இருக்கிறார், முதலமைச்சர் அலுவலகம் இருக்கிறது, என்னுடைய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உடனடியாக அந்தச் செய்தியை என்னிடம் சேர்த்துவிடுவார்கள்.
எல்லோரும் தமிழ்நாடு சி.எம்-யை நம்பர் ஒன் சி.எம். என்று சொல்கிறார்கள். அதுபோல் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலம் என்று சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் பக்கபலமாக இருந்து உங்கள் ஆதரவை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார். இக்கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு அதிகாரிகள் போன்றவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.