எங்கிருந்து வந்தது நான்காவது தோட்டா? காந்தி கொலையும், அதிரவைக்கும் விடை தெரியாத கேள்விகளும்...

First Published Oct 27, 2017, 4:39 PM IST
Highlights
Was There a Second Assassin Who Shot Mahatma Gandhi Mystery Deepens


மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு 70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த அந்த வழக்கை தூசு தட்டி விசாரணை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில், ஆய்வாளர் பங்கஜ் பட்னிஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உண்மையில், ஏன் 70 ஆண்டுகளுக்கு பின் காந்தி கொலையின் பின்னணி குறித்து அவர் சந்தேகம் எழுப்ப வேண்டும்?, ஆதாரமில்லாமல் வழக்கு தொடருவாரா?, காந்தியின் கொலையில் நாதூராம் கோட்சேவைத் தவிர்த்து 2-வது நபர் இருக்கிறாரா? என பல்வேறு கேள்விகளை பங்கஜ் பட்னிஸ் நமக்குள் எழுப்பி இருக்கிறார்.

யார் இந்த பங்கஜ் பட்னிஸ்?

முதலில் பங்கஜ் பட்னிஸ் என்பவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம். பங்கஜ் பட்னிஸ் என்பவர் ஒரு எந்த நிறுவனத்தையும் சாராத ஒரு சுய வரலாற்று ஆய்வாளர். “வினாயக் தாமோதர் சவராக்கர்” சிந்தனையில் இருந்து உருவான “அபிநவ் பாரத்” என்ற அமைப்பை நிறுவியவர்களில் பங்கஜும் ஒருவர் ஆவர். இவர்தான் காந்தியின் கொலையில் கோட்சேவுக்கு அடுத்தார்போல் மற்றொரு நபரின் பங்கும் இருக்கிறது என சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார்.

சரி, 1948, ஜனவரி 30-ல் என்ன நடந்தது?

நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்க தொடங்கி சரியாக 6 மாதம்தான் ஆகி இருந்தது. 1948ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி ஒரு மாலை வேலை, டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையில் அனைத்து மத பஜனைக் கூட்டம் நடந்து முடிந்து இருந்தது.

காந்திஜி மெல்ல எழுந்து சென்றார். வழக்கறிஞரும், இந்து வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்பவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் காந்தியை சரியாக 5.17 மணிக்கு சுட்டுக்கொலை செய்தார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டுகள் காந்தியின் உடலை சல்லடையாகத் துளைத்தெடுத்தன. குண்டடிபட்ட காந்தி நிகழ்விடத்திலேயே மரணத்தை தழுவினார்.

இதுதான் நடந்தது…..

ஆனால், இப்போது சர்ச்சை என்வென்றால், காந்தி உடம்பில் பாய்ந்தது 3 தோட்டாக்களா? அல்லது 4 தோட்டாக்களா? என்பதுதான். ஏனென்றால், கோட்சே சுடும்போது 3 முறை மட்டுமே துப்பாக்கி சத்தம் கேட்டதாக சிலரும், கோட்சேவுக்கு பின்னால் இருந்து 4-வது ஒரு குண்டு பாய்ந்தது என ஒரு சிலரும் கூறியதும் , அதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதும் வழக்கு தொடர காரணமாக இருந்துள்ளது.

அப்படியானால், கோட்சே தவிர்த்து மற்றொரு நபராலும் காந்தி கொல்லப்பட்டு இருக்கலாமா?, 2-வது நபருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற ஐயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆதாரங்கள் இருக்கிறதா?

காந்தி 3 குண்டுகளால் மட்டும் சுடப்படவில்லை, 4-வது குண்டும் அவர் உடம்பில் பாய்ந்திருக்கிறது என பங்கஜ் கூறுகிறார். ஆனால், போலீசின் அறிக்கையில் காந்தியின் உடலில் 3 தோட்டாக்கள் மட்டுமே இருந்தன என்று தெரிவிக்கிறது.

ஆனால், மகாத்மா காந்தி கொல்லப்பட்ட மறுநாளில் வெளியான “தி டைம்ஸ் ஆப் இந்தியா”, “டான்”, “ராய்டர்ஸ்” மற்றும் “லோக்சட்டா” ஆகிய நாளேடுகள் காந்தி 4 குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார் என்று முதல்பக்கத்திலேயே தலைப்புச் செய்தியாக பிரசுரித்துள்ளன.

இதைத்தான் பங்கஜ் ஆதாரமாக முன்வைக்கிறார். போலீசார் தரப்பில் 3 குண்டுகள் தான் காந்தி உடம்பில் பாய்ந்தது என்று கூறப்படும் நிலையில், 4 குண்டுகள் பாயந்து காந்தி கொல்லப்பட்டார் என்று பத்திரிகைகள் எப்படி செய்தி வெளியிடமுடியும்? என்கிறார்.

அது மட்டுமல்ல பிர்லா மாளிகையில் இருக்கும் ஒரு படுக்கை அறையில் இருந்த ஒருவர், காந்தி சுடப்பட்டதை நேரடியாக பார்த்துள்ளார். அந்த சாட்சியிடம் பங்கஜ் பேசுகையில், “ 4 குண்டுகள் காந்தியை நோக்கி பாய்ந்தன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “தி இந்து “நாளேடுகூட காந்தியின் உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தற்கான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது என்று பங்கஜ் உறுதிபடத் தெரிவிக்கிறார். பத்திரிகைகள், முக்கிய சாட்சிகள் 4 குண்டுகள் பாய்ந்துள்ள என்று கூறுகிறார்கள் என்பதால், 70 ஆண்டுகளுக்கு பின் இது சர்ச்சைக்குரியதாக இருக்க முடியாது என்று பங்கஜ் தெரிவிக்கிறார்.

டைரி குறிப்பு

தன்னுடைய வாதத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, காந்தியின் உறவுகளையே சாட்சியாக வைக்கிரார், பங்கஜ்.

காந்தியின் பேரன் மனுபென் காந்தி என்பவர் தனது சுய டைரி குறிப்பில் காந்தி கொல்லப்பட்டது குறித்து ஒரு குறிப்பு எழுதியுள்ளார். அதில், “ காந்தி கொல்லப்பட்ட சம்பவம் நடந்த இடத்தில் 2 குண்டுகளையும், அவரின் உடம்பில் இருந்தது அதுவும் எரிக்கப்பட்டபின் சாம்பலில் இருந்தது எனத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், மனுபென் தனது குறிப்பில் காந்தி கொல்லப்பட்டபின் அவரின் சால்வையில் ஒரு குண்டு இருந்தது அதை நாங்கள் பார்த்தோம். காந்தியை 3 குண்டுகள் கொண்டுதான் சுட்டார்கள் என்றால், 4-வது குண்டு எங்கிருந்து வந்தது?, 4 துப்பாக்கி குண்டுகள் எப்படி 3 ஆக குறைந்தது? என தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போலீசார் அளித்த அறிக்கையில் நாதுராம் கோட்சேயின் துப்பாக்கியில் மொத்தம் 7 தோட்டாக்கள் மட்டுமே நிரப்பமுடியும். இதில் 3 தோட்டாக்களை பயன்படுத்தி கோட்சே காந்தியை கொலை செய்தார். அந்த துப்பாக்கியில் இருந்து 4 தோட்டாக்களை கைப்பற்றினோம் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆக, கோட்சேயின் துப்பாக்கியில் 7 குண்டுகள் இருந்தன என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். ஆனால், 4-வது குண்டுபாய்ந்தற்கான ஆதாரங்களும், கூற்றுகளும் கூறப்படுவதும், 4-வது குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 4-வது குண்டு எங்கிருந்து, எப்படி வந்து என்ற கேள்வி எழுகிறது எனத் பட்னிஸ் தெரிவிக்கிறார்.

இப்படியும் இருக்கு சர்ச்சை……

அதேசமயம், “தி நியூயார்க் டைம்ஸ்”, “தி டெய்லி டெலிகிராப்”, “தி வாஷிங்டன் போஸ்ட்” போன்ற வெளிநாட்டு நாளேடுகள் காந்தி 3 குண்டுகளால் சுட்டு கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளதையும் கருத்தில் எடுக்க வேண்டும்.

மேலும், காந்தியை யார் கொலை செய்தது?(the men who killed Gandhi?) என்ற புத்தகத்தை எழுதிய மனோகர் மல்கோன்கர் தனது புத்தகத்தில் காந்தி உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் மட்டுமே துளைத்தன. இதை நேரடியாக பார்த்த பலர் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே “தி கார்டியன்” எனும் நாளேடு, காந்தி கொல்லப்பட்டபோது, 4 குண்டுகள் துப்பாக்கியில் இருந்து வெளியேறின என்ற கூற்றை முன்வைக்கிறது.

இதில் 3 குண்டுகள் காந்தியின் உடலை நோக்கி பாய்ந்தன. 4-வது குண்டு அதாவது, நாதுராம் கோட்ேச காந்தியை சுட்டுக்கொன்றபின், தான் வைத்திருந்த துப்பாக்கியால், சுட்டுக் தற்கொலை செய்ய முயன்றார், ஆனால், கோட்சேவுக்கு பின்னால் நின்று இருந்த ஒரு விமானப்படை வீரர் அவரை பிடித்து உலுக்கியபோது, அந்த குண்டு திசைமாறி வெடித்தது என்று தெரிவித்துள்ளது. ஆனால், அந்த இடத்தில் கோட்சே தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்த அறிக்கை ஏதும் இல்லை. போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் அப்படி தகவல் ஏதும் குறிப்பிடவில்லை.

வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

வரலாற்று ஆய்வாளரான ஆதித்யா முகர்ஜி கூறுகையில், “ வரலாறு என்பது சாதாரணமாக எழுதப்படுவதில்லை. ஏராளமான ஆதாரங்களை சேகரித்து, நாளேடுகளில் இருந்து குறிப்பெடுத்து, ஆயிரக்கணக்கான செய்திதாள்களே சேகரித்து அதன்மூலம் கூறுவார்கள். ஏதோ 2 நாளேடுகளை மட்டும் பார்த்து வரலாறுகள் எழுதப்படுவதில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்கு தொடர்புடையவற்றோடு மட்டும் கணக்கில் எடுத்து ஆய்வு நடத்துவார்கள். ஆதலால், 4-வது துப்பாக்கி குண்டு என்ற பேச்சே இல்லை, அதனால், அது தொடர்பான எந்த ஆய்வும் இல்லை” என்றார்.

டெல்லி அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஏ. அண்ணாமலை கூறுகையில், “எனக்கு தெரிந்தவரை, நான் படித்தவரை, காந்தி 3 குண்டுகள் மூலமே சுட்டுக்கொல்லப்பட்டார். ஆதலால் 4-வது துப்பாக்கி குண்டால், 2-வது நபரால் காந்தி கொல்லப்பட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. மேலும், கோட்சேவே தானே காந்தியை கொன்றேன் என ஒப்புதல் வாக்குமூலமே அளித்துவிட்டார். அவரை குற்றத்தை ஒப்புக்கொண்டபின் 2-வது நபரும் ஈடுபட்டார் என்று ஏன் கற்பனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஆங்கிலேயர்களுக்கு நெருங்கிய தொடர்பு?

காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆங்கிலேயர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று பங்கஜ் தெரிவிக்கிறார். காந்தியை கொலை செய்து காந்தி-ஜின்னா அமைதி ஒப்பந்தத்தை அழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்து இருந்தனர். இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையே காலம்காலமாக பதற்றத்தை உருவாக்கி குளிர்காயலாம் என நினைத்து இருந்தனர்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து செல்லும் போது திவாலாகிப்போனார்கள். அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது. ஏற்றுமதியை அதிகப்படுத்தி பணம் சம்பாதிக்க எண்ணினர். இதற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே பகையை உண்டாக்க திட்டம் தீட்டினார். இல்லாவிட்டால், லாகூரில் இருந்து பஞ்சாப் அமிர்தசரஸ் நகருக்கு பொருட்கள் இறக்குமதியாகும், மும்பையில் இருந்து கராச்சிக்கு பொருட்கள் ஏற்றுமதியாகும். காலத்துக்கும் பகையை உண்டாக்கும் நோக்கிலேயே இப்படி ஒரு சதி செய்யப்பட்டது. ஆதலால்,ஆங்கிலேயர்கள் நோக்கம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என பங்கஜ் தெரிவிக்கிறார்.

தாக்கத்தை ஏற்படுத்துமா...?

வரலாற்று ஆய்வாளர் முகர்ஜி கூறுகையில், “ ஒருவேளே பட்னிஸ் தனது ஆதாரங்களை எல்லாம் திரட்டி காந்தி 4 குண்டுகளால் கொல்லப்பட்டார் என நிரூபித்தால், நடப்பில் உள்ள வரலாறு, காந்தியை சுற்றி இருக்கும் வரலாறு அனைத்தும் சிக்கலாகவும், குழப்பமாகவும் மாறிவிடும். இதனால் எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை. ஒரு இந்து வலதுசாரியைச் சேர்ந்தவர்தான் கொலை செய்தார் என்ற விஷயத்தை மாற்ற முடியாது, கோட்சே பயன்படுத்திய துப்பாக்கி குண்டையும் மாற்ற முடியாது” என்றார்.

click me!