
முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை பெறுவதில் எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தங்க கவசத்தை ஆட்சியரிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் 13 கிலோ எடையுடைய தங்க கவசத்தை ஜெயலலிதா வழங்கியிருந்தார்.
அந்த தங்க கவசம், ஒவ்வொரு தேவர் குருபூஜையின் போதும் அக்டோபர் மாதம் 25-ம் தேதி வங்கியிலிருந்து பெறப்பட்டு குருபூஜை முடிந்தவுடன் நவம்பர் ஒன்றாம் தேதி மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும். ஆனால், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக இந்த ஆண்டு தங்க கவசத்தை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
அரசு சார்பில் வங்கி நிர்வாகத்திடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து தங்க கவசத்தை பெறுவதற்காக இன்று காலை பன்னீர்செல்வம் மதுரை பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு சென்றார். ஆனால், தினகரனால் பொருளாளராக நியமிக்கப்பட்ட ரெங்கசாமியிடமே தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என தினகரன் ஆதரவாளர்கள் வங்கி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இருதரப்பினரிடமும் வங்கி மேலாளர் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இறுதியாக இருதரப்பினரிடமும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பில் வழங்க முடிவெடுக்கப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் வழங்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், இதுவரை முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை நானும் அறங்காவலரும்தான் பெற்றுவந்தோம். ஆனால் இந்தமுறை சிலர் தங்களிடம் தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதனால் எந்தவித பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சர்ச்சையை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.