
ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது எனவும் தமிழுக்கு நிகர் எந்த மொழியும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்புகள் வேறு எந்த மொழிக்கும் இல்லை எனவும் ஜெயலலிதாவின் சிந்தனைக்கேற்ப தமிழ் வளர்ச்சிக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலை கழகமான ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழிருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் அதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த இருக்கையை ஏற்படுத்துவதன்மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு இந்தியவியல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளுதல், ஆராய்ச்சி கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள், ஆவண காப்பகங்கள் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறிய செய்ய வழிவகை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.