இலையை கிடைக்க விடாமல் செய்த பன்னீர்... கவசத்தை கையில் தொட முடியாமல் செய்து பழிதீர்த்த தினகரன்..!

 
Published : Oct 27, 2017, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
இலையை கிடைக்க விடாமல் செய்த பன்னீர்... கவசத்தை கையில் தொட முடியாமல் செய்து பழிதீர்த்த தினகரன்..!

சுருக்கம்

muthuramalingam thevar gold armor gave to madurai collector

அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் பிரிந்ததால், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியதால் சின்னம் முடக்கப்பட்டது. அந்த வழக்கு இன்னும் தேர்தல் ஆணையத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இலையைத்தான் முடக்கிவிட்டார். ஆனால் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் விவகாரத்தில் வென்றே தீருவேன் என்ற எண்ணத்தில் தினகரன் வென்றுவிட்டார்.

இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை பன்னீர்செல்வம் எடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த தினகரன், தனது ஆதரவாளர்களை அனுப்பிவைத்து பன்னீர்செல்வத்திடம் கிடைக்காமல் தடுத்துவிட்டார்.

முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை முதல்வர் பழனிசாமி மற்றும் தினகரன் ஆகிய இருதரப்புக்கும் தராமல், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெறும். ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் 13 கிலோ எடையுடைய தங்க கவசத்தை ஜெயலலிதா வழங்கியிருந்தார். 

அந்த தங்க கவசம் தேவர் ஜெயந்தியின்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். பின்னர் பாதுகாப்பாக மதுரையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் வைக்கப்படும். ஆண்டுதோறும் அக்டோபர் 25-ம் தேதி தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் கடந்தாண்டு வரை பன்னீர்செல்வம் தங்க கவசத்தை வங்கியிடமிருந்து பெற்று தேவர் சிலைக்கு அணிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுக இரு அணிகளாக பிரிந்து பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் சீனிவாசன் நியமனத்தை எதிர்த்தும் அதிமுக வங்கி கணக்கை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். 

அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்தபோதும் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை பெற அதிமுகவினர் வங்கி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது வங்கி நிர்வாகம், ஆட்சியரின் அனுமதியை கோரியது. மாவட்ட நிர்வாகம், தேவர் உறவினரிடம் ஆட்சேபனையில்லா கடிதம் பெற அறிவுறுத்தியது.

இதையடுத்து, இன்று காலை பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மதுரை கிளையிலிருந்து முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை பெறுவதற்காக வங்கி திறந்ததுமே துணை முதல்வர் முதல் ஆளாக சென்றார். ஆனால் அதற்குள் தினகரன் ஆதரவாளர்கள், வங்கியின் வெளியே குவிந்தனர். தங்களையும் வங்கிக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் தினகரனால் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட ரெங்கசாமியிடம்தான் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தினகரன் மற்றும் பழனிசாமி தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்க்கும் வகையில், இருதரப்பையும் அழைத்து வங்கி மேலாளர் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இருதரப்புக்கும் இல்லாமல், தங்க கவசத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்க வங்கி நிர்வாகம் முடிவெடுத்தது. வங்கி நிர்வாகத்தின் முடிவுக்கு பழனிசாமி மற்றும் தினகரன் தரப்பு சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து இருதரப்பினரிடமும் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர், தங்க கவசத்தை பசும்பொன் சார்ந்த மாவட்டமான இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவார். குருபூஜை முடிந்தவுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், தங்க கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் பின்னர் அவர் வங்கியிடமும் ஒப்படைப்பர்.

தங்க கவசத்தை பன்னீர்செல்வம் பெற்றுவிடக்கூடாது என்ற தனது எண்ணத்தில் ஜெயித்துக் காட்டிவிட்டார் தினகரன். தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பன்னீர்செல்வம் பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தை சாதித்துக் காட்டிவிட்டார் தினகரன். 
 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!