
ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்துவதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தலை அறிவிக்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், சென்னை வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அனைத்திற்கும் சென்னை மாநகராட்சியே காரணம் என்பதால், இந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அல்லாத சிறப்பு குழுவை நியமிக்க வேண்டுமென குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை திமுகவின் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.
அப்போது போலி வாக்களர்களை கண்டறிய ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி திங்கட்கிழைமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் ரவிசந்திரபாபு.