வன்னியர்களின் வாக்குகளை பெறவா தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது..? நீதிமன்றத்தில் ராமதாஸ் சொன்ன பதில்!

Published : Oct 03, 2021, 08:42 AM IST
வன்னியர்களின் வாக்குகளை பெறவா தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது..? நீதிமன்றத்தில் ராமதாஸ் சொன்ன பதில்!

சுருக்கம்

தேர்தலில் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  

கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. இதற்கான சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, இதன்படி வழக்குகளுக்கு பதிலளித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் போட்டியிட முடியவில்லை என 1989-ஆம் ஆண்டில் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், வன்னியர்கள் உள்பட 106 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் என்ற தனிப்பிரிவு உருவாக்கி, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரின் அறிக்கையின் அடிப்படையில், மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினர் மற்றும் பிற பிரிவினருக்கு முறையே 7 சதவீதம் மற்றும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.


தேர்தலில் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு. முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. வன்னியர் சாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை, வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளனர்.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆய்வு செய்ய நீதிபதி குலசேகரன் கமிட்டி அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யலாமா, வேண்டாமா என்பதை ஆய்வு செய்யவே அமைக்கப்பட்டுள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!