இப்படியே போச்சுனா கடலூர் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது!என்எல்சிக்கு எதிராக அன்புமணி எடுத்தஅதிரடி முடிவு

By vinoth kumarFirst Published Jan 6, 2023, 12:15 PM IST
Highlights

கடந்த காலங்களில் நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்காத என்.எல்.சி இப்போதும் நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்போவதில்லை என்று உறுதிபட தெரிவித்து விட்டது. 

கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும்  என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற கோரி இரண்டு நாட்கள் எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு  முயற்சியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் தேவையும், கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரான என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் கடலூர் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது என்பதை அரசும், மாவட்ட நிர்வாகமும் உணர வேண்டும்.

இதையும் படிங்க;- திடீர் கரிசனம் எங்கிருந்து வந்தது! உங்க ஆசைவார்த்தைக்கு கடலூர் மக்கள் ஏமாறமாட்டாங்க! NLCக்கு எதிராக அன்புமணி.!

என்.எல்.சி நிறுவனம் அதன்  முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3000-க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களையும், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10,000 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தப்படவுள்ளது; இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்களை பறிக்கவுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் போதிலும் என்.எல்.சி நிறுவனம் அதன் முயற்சிகளை கைவிடவில்லை. கடலூர்  மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்.எல்.சி தீவிரப்படுத்தி வருகிறது.

என்.எல்.சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் சாதாரணமானவை அல்ல. அவை முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும். மலைக் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும்  இந்த நிலங்களில் விளையும். இப்போது கூட அங்கு நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் விளைகின்றன.  ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் துடிப்பதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.
என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களைத் தருவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

கடந்த காலங்களில் நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்காத என்.எல்.சி இப்போதும் நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்போவதில்லை என்று உறுதிபட தெரிவித்து விட்டது.  விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக 1985-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படவில்லை. ஆனாலும், இன்னும் 25,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி துடிப்பதற்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளன. 

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் திட்டத்தின் கீழ், என்.எல்.சி  நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு என்.எல்.சி தனியார்மயமாக்கப்பட்டால், தனியார் நிறுவனத்தால் நிலங்களை கையகப்படுத்த முடியாது. அதனால், தனியார்மயமாக்குவதற்கு முன்பாகவே 25,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அதையும் சேர்த்து தனியாருக்கு விற்க என்.எல்.சி திட்டமிட்டிருக்கிறது. அதனால் தான் நிலங்களை பறிக்க இவ்வளவு வேகம் காட்டப்படுகிறது.

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களை பறிக்கும் முயற்சியை வீழ்த்த வேண்டும்; கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும்  என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி  நாளை ஜனவரி 7 மற்றும் நாளை மறுநாள் 8 ஆகிய  தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். நாளை காலை வானதிராயபுரத்தில் தொடங்கும் பிரச்சார எழுச்சி நடைபயணம், தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக் குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி வழியாக நாளை மறுநாள்  ஜனவரி 8-ஆம் தேதி மாலை கரிவெட்டி கிராமத்தில் நிறைவடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  இது வெறும் மண் அல்ல! மக்களின் உணர்வு! மிரட்டி பறிக்கலாம் என்று நினைத்தால் அது பலிக்காது! எச்சரிக்கும் அன்புமணி

click me!