
ஜெயா டிவியின் சிஇஓ விவேக், வருமான வரித்துறையில் ஆஜராகி விளக்கமளித்த நிலையில் இன்று அவரின் சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகீலா ஆகியோர் வருமான வரித்துறையில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என கடந்த வியாழக்கிழமை தொடங்கி 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். கோடநாடு பங்களா, டீ எஸ்டேட் உட்பட சில இடங்களில் மட்டும் தொடர்ந்து வருகிறது. சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டாலும், இளவரசியின் மகனும் ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸை
நிர்வகித்து வருபவருமான விவேக்கை மையமாக வைத்தே தீவிர சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
187 இடங்களில் 1800 அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த சோதனை, பல இடங்களில் முடிவடைந்துள்ள நிலையில் இளவரசியின் மகன் விவேக், முக்கிய பங்கு வகிக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், விவேக்கின் மூத்த சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடு, அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனம், விவேக்கின் மற்றொரு சகோதரி ஷகீலா மற்றும் அவரது கணவர் முக்கிய நிர்வாகியாக இருக்கும் மிடாஸ் மதுபான ஆலை ஆகியவற்றில் 5 நாட்களாக சோதனை நடைபெற்றது. கிருஷ்ணப்ரியா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சொத்து பத்திரங்கள், தங்க, வைர நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஜெயா டிவி அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயா டிவியின் சிஇஓ விவேக், நேற்று முன்தினம் வருமான வரித்துறை அலுவலகம் அழைத்து செல்லப்பட்டு அவரிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். இதன் பின்னர் விவேக் திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் இன்று விவேக்கின் சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகீலா ஆகியோர் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். இன்று காலை 11 மணியளவில் வருமான வரி அலுவலகத்தில் கிருஷ்ணபிரியா, ஷகீலா ஆஜராகினர். ஜெயா டிவியின் பொது மேலாளர் நடராஜனும் ஆகராகி உள்ளனர். அவரிடம் ஜெயா டிவி வரவு - செலவு கணக்குகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர்.