காவல்துறை மரியாதையுடன் விவேக்கை அடக்கம் செய்ய வேண்டும்... தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரும் தமிழக அரசு..!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 17, 2021, 1:43 PM IST
Highlights

பத்மஸ்ரீ விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக சிந்தனையாளர் என பல பாதைகளிலும் சிறப்பாக பயணித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திரையுலகினரை மீளா முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 


                                           
தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விவேக் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இன்று மாலை 5 மணி அளவில் விவேக் உடல் விருகம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. 

தனது காமெடியில் கூட சமூக சிந்தனைகளை வளர்க்கும் கருத்துக்களை பரப்பி வந்த விவேக். 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார். டெங்கு ஒழிப்பு, கொரோனா தடுப்பு உள்ளிட்ட அரசு சார்ந்த பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளும் நடித்து கொடுத்திருக்கிறார். 


இப்படி மறைந்த பிறகும் மக்கள் மனதில் மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக சிந்தனை, இயற்கை மீது ஆர்வம் ஆகியவற்றை விதைத்துவிட்டு சென்றுள்ள நடிகர் விவேக்கிற்கு உரிய இறுதி மரியாதை செலுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் பத்மஸ்ரீ விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. 
 

 

tags
click me!