ஒவ்வொரு வாக்குகளும் ஆயிரம் மடங்கு சமம்.! பீனிக்ஸ் பறவை போல் மீண்டு எழுவோம்- விஜயகாந்த்

By Ajmal Khan  |  First Published Mar 3, 2023, 3:08 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ள தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் திருமங்கலம் பார்முலாவை திமுக முறியடித்துள்ளதாக  விமர்சித்துள்ளார். 


பண மழை பொழிந்த ஈரோடு தேர்தல்

ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக ஒரு சதவிகித வாக்கு கூட வாங்க முடியாமல் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி தொடர்பாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள் வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் பண மழை பொழிந்தது. ஆளும்கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததோடு, குக்கர், கொலுசு, குங்குமச்சிமிழ், வேட்டி, சேலை, இன்ப சுற்றுலா, தினந்தோறும் கறி விருந்து வழங்கியதாக வீடியோ ஆதாரத்துடன் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும் எந்த தொகுதியிலும் நடைபெறாத வகையில் வாக்காளர்களை காலை முதல் மாலை வரை பட்டறையில் அடைத்து வைத்த கொடூரமும் அரங்கேறியது. 

Latest Videos

அதிமுக எதிர்கொண்ட கடைசி 8 தேர்தல்கள்..! எடப்பாடி பழனிசாமியால் கட்சிக்கு வீழ்ச்சியா.? வளர்ச்சியா.?

திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிய ஈரோடு

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற பணப்பட்டு வாடாவை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும்கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டது. இதன்மூலம் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டது. மேலும், 2009-ல் தி.மு.க உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவை 14 ஆண்டுகளுக்கு பின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.கவே முறியடித்து விட்டது. ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக முறைகேடாக வெற்றி பெற்றிருப்பது புதிதல்ல.

கண் துடைப்புக்காக தேர்தலா.?

தற்போது மாபெரும் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், மிகப்பெரிய தொகையை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல. முழுக்க முழுக்க பணத்தை நம்பியே நடைபெற்ற தேர்தல். இனிமேல் நடைபெறும் இடைத்தேர்தல்களில் எந்த கட்சியின் வேட்பாளர் மரணம் அடைகிறாரோ, அந்த கட்சியில் உள்ள ஒரு நபரையே எம்எல்ஏவாக அறிவித்து விடுங்கள். எதற்காக இந்த கண்துடைப்பு நாடகம்.

பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுவோம்

பணபலம் அதிகாரபலம், ஆட்சி பலத்தை எதிர்த்து நமக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் ஆயிரம் மடங்கு சமம். இது உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த வாக்குகள். மேலும், இடைத்தேர்தலில் இரவு பகல் என பாராமல் உழைத்த நமது நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறுவோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தருமமே வெல்லும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவின் தோல்விக்கு முழுக்க முழுக்க எடப்பாடியே காரணம்.! ஜெயக்குமார் ஒரு பபூன்- டிடிவி தினகரன்

click me!