ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்தி வெற்றி பெற முடியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக மீது மக்கள் அதிருப்தி
மதுரை கோச்சடை பகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்த முடிவு. மருங்காபுரி மற்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மட்டும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். ஆளுங்கட்சி என்பதால் மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டால் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாக்களிப்பது இயற்கையாக நடக்கக் கூடியது. ஆனால் திமுக மீது 21 மாதங்களில் கடுமையான அதிருப்தி உள்ளது. பொதுத்தேர்தல் வரும்பொழுது எப்படி அதிருப்தி இருக்குமோ அந்த அளவிற்கு இருக்கிறது.
அதிமுக எதிர்கொண்ட கடைசி 8 தேர்தல்கள்..! எடப்பாடி பழனிசாமியால் கட்சிக்கு வீழ்ச்சியா.? வளர்ச்சியா.?
நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது
10 ஆண்டு ஆட்சியில் இல்லாததால் காய்ந்தமாடு கம்பங்கொளையில் விழுந்தது போன்ற செயல்படுகின்றனர். இடைத்தேர்தலின் போது இதுவரை கேள்விப்படாத அளவிற்கு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இடைத்தேர்தலில் இந்த வாக்கு வித்தியாசம் ஒன்றும் பெரியது இல்லை. இதே தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது என்பது கடந்த காலத்தை பார்த்தாலே தெரியும். சட்டமன்றத் தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இடைத்தேர்தலில் தெருவுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் வேலை பார்த்தார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வாக்காளருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சேர்ந்திருக்கும். இந்த வெற்றி வாங்கப்பட்டது, மக்கள் வழங்கியது அல்ல.
மேற்கு மண்டலம் கலகலத்து போய்விட்டது
பழனிச்சாமி என்ற மனிதர் அவரை சேர்ந்த சிலர் ஆணவம், அகம்பாவம், ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் கிடைத்த பணத்தின் காரணமாக திமிர் ஆகியவற்றால், மேற்கு மண்டலமே எங்களது கோட்டை என்று சொன்னார்கள். ஆனால் கலகலத்து போகியுள்ளது. எடப்பாடி தரப்பும் திமுகவிற்கு இணையாக பணமும், பொருட்செலவும் செய்தும்கூட வெற்றிபெற இயலவில்லை. இந்த அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். தனி சின்னத்தில் நின்று இருந்தால் பெரும் மோசமாகி இருக்கும். இபிஎஸ் அணி இரட்டை இலையிலிருந்து இவ்வளவு பாடுபட்டுள்ளார்கள். வருங்காலத்தில் அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த, அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இதற்கு ஒரு சிலரின் சுயநலம் தடையாக இருக்கலாம், அந்த சுயநலம் உடைத்து எறியப்படும்.
துரோகம் செய்தவர் கையில் அதிமுக
பழனிச்சாமியுடைய தலைமைக்கு முதலமைச்சரான பிறகு அவர் டெல்லியின் ஆதரவு இருந்ததால், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. மத்தியில் ஆள்பவர்களின் உதவி இருந்ததால் பதவியில் இருந்தார். இது ராஜதந்திரம் இல்லை. குப்பனோ,சுப்பனோ, இருந்தால்கூட அந்த ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியும். பழனிச்சாமி சிலரை வசப்படுத்தி வைத்துள்ளார், தவறான பாதையில் தவறான மனிதராக இருக்கிறார் பழனிச்சாமி. அதிமுகவுக்கு துரோகம் இழைக்கப்பட்டதுக்காக தொடங்கப்பட்ட கட்சி அதே துரோகம் செய்தவர் தலைமையில் உள்ளது.இதற்கு காலம் நிச்சயம் நல்ல தீர்ப்பை தரும். 2500 பேரை வசப்படுத்தி தொண்டர்கள் என் பின்னால் என சொல்கிறார், அவர் உண்மையான தலைவர் இல்லை. ஈரோடு பகுதியை கோட்டை என கூறிவிட்டு ஏன் கோட்டை விட்டார்கள்?
அதிமுகவில் முன்னேற்றம் இருக்காது
2016 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் பழனிச்சாமி போன்ற தீயவர் தலைமையில் இல்லாமல் இருந்தால், நிச்சயம் ஆர்கே நகர், மதுரை கிழக்கு மருகாபுரி போலவே வெற்றி பெற்றிருப்போம். பழனிச்சாமி பிடியில் அண்ணா திமுக இருக்கிற வரைக்கும் எந்த முன்னேற்றமும் கிடையாது. தேர்தல் கூட்டணி பற்றி நவம்பர், டிசம்பரில் முடிவு செய்வோம். நாங்கள் பழனிச்சாமி தலைமையில் இணைய வாய்ப்பே இல்லை. நாங்கள் தனி இயக்கம் எங்களை இணைக்கக் கூடாது என ஜெயக்குமார் பேசுவது, ஒன்று அவர்கள் செவிடர்களாக இருக்க வேண்டும், இல்லை நான்காண்டு ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட திமிராக இருக்கும். ஜெயக்குமார் பேசுவதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அவர் பபூன் மாதிரி ஏதாவது பேசிக் கொண்டிருப்பார் என டிடிவி தினகரன் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்