பிரசாரத்துக்கு தயாராகிறார் விஜயகாந்த்... அதிமுக கூட்டணிக்கே வெற்றி என கேப்டன் முழக்கம்!

By Asianet TamilFirst Published Apr 9, 2019, 6:54 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சிகிச்சை முடித்துவிட்டு வந்த விஜயகாந்த், தொகுதி பங்கீடு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கூட்டணி இறுதியான பிறகு, விஜயகாந்த் தொடர்ந்து ஓய்வில் இருந்துவருகிறார். தேர்தல் பிரசாரத்துக்கு விஜயகாந்தின் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா சென்றுவருகிறார். இதேபோல அவருடைய மூத்த மகன் விஜய பிரபாகரனும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மருத்துவர்கள் ஆலோசனைபடி தற்போது முழு ஓய்வில் விஜயகாந்த் இருந்துவருகிறார். இருந்தாலும், விஜயகாந்த் எப்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அக்கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


இந்நிலையில் அவர் நடத்திவரும் கேப்டன் தொலைக்காட்சியில் தோன்றி சிறிய பேட்டி ஒன்றை விஜயகாந்த் அளித்துள்ளார், அந்தப் பேட்டியில், “என் உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் பிரசாரத்துக்கு வந்து பேசுவேன். மருத்துவர்கள் அறிவுரைப்படிதான் வர முடியும். தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக கூட்டணி தோல்வியடையும். ஏனென்றால், திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி.
இந்தத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கிற போர். இதில் தர்மம்தான் வெற்றி பெறும். நரேந்திர மோடி நல்லவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு தேமுதிக தொண்டர்கள் உழைக்க வேண்டும். இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்று விஜயகாந்த் தெரிவித்துளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்துவரும் விஜயகாந்த், கருணாநிதி மறைவின்போது அமெரிக்காவில் இருந்தபடி கண்ணீருடன் பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது நீண்ட நாட்கள் கழித்து விஜயகாந்த் பேசியிருப்பது தேமுதிக தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. தேர்தல் பிரசாரம் முடிவடையும் ஓரிறு நாட்களுக்கு முன்பாக விஜயகாந்த் பிரசாரத்து வருவார் என தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!