மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு எடப்பாடியிடம் நானும் என்து அண்ணனும் எப்படி கெஞ்சினோம் தெரியுமா ? ஸ்டாலின் உருக்கம் !!

By Selvanayagam PFirst Published Apr 8, 2019, 11:57 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க, கடைசி வரை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாகவும், நானும் எனது அண்ணன் அழகிரியும் முதலமைச்சர் எடப்பாடியிடம்  எப்படி கெஞ்சினோம் தெரியுமா ? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் உருக்கமாக பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற திமுக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வசந்தகுமார் ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின்  கருணாநிதியின் மரணத்தில் கூட சித்திரவதை செய்த கூட்டம் தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டம். அண்ணாவுக்கு பக்கத்திலே ஒரு ஆறடி நிலத்தை தர மறுத்தது எடப்பாடி அரசு. அமைச்சர்கள் எல்லாம் கூடி பேசினார்களாம். 

ஒரு சிலர் தரலாம் என்றனராம். ஒரு சிலர் தரக்கூடாது என்று சொன்னார்களாம். அதில் முக்கியமாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில், நிலம் தரக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறினாராம். இந்த செய்திகள் எல்லாம் எங்களுக்கு கிடைத்தது.

இந்திய தேசிய தலைவர்கள் பலருக்கும் மணிமண்டபம் அமைத்தவர் கருணாநிதி. கட்டபொம்மனுக்கு கோட்டை அமைத்தவர், கருணாநிதி. ஆனால் கருணாநிதிக்கு ஆறடி நிலம் கூட இல்லை என்று எடப்பாடி கூட்டம் சொல்லியது. ஆறு அடி நிலத்தை பெறுவதற்கு கருணாநிதிக்கு அருகதை கிடையாதா? 6 லட்சம் அடியை பெறுவதற்குக்கூட கருணாநிதிக்கு தகுதி உண்டு.

வெட்கத்தை விட்டு சொல்கிறேன். நான், என்னுடைய அண்ணன் அழகிரி, என்னுடைய மைத்துனர் செல்வம், நம்முடைய பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, இப்படி ஒட்டுமொத்தமாக நாங்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க சென்றோம். அப்போது சிலர் தடுத்தார்கள். எடப்பாடியை எல்லாம் நீங்கள் சந்திக்க கூடாது என்றனர். ஆனால் நான் கவுரவத்தை பார்க்கவில்லை. என்னுடைய மரியாதையை பார்க்கவில்லை. கருணாநிதியின் தன்மானத்தையும், அவருக்கு சேர வேண்டிய புகழ் சேர வேண்டும் என்பதையும்தான் பார்த்தேன்.

பலமுறை வாதிட்டு பார்த்தும், எடப்பாடி பழனிச்சாமி கையைப்பிடித்து கெஞ்சியும், அவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரவில்லை
தமிழினத் தலைவருக்கு இடம் தராதவர்களுக்கு, பாடம் புகட்ட புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை நீங்கள் தரவேண்டும். 18 சட்டசபை இடைத்தேர்தலில், 18க்கும் 18 தொகுதிகளை வழங்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 

click me!