பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ள விஜய், தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
சிஏஏ இந்தியாவில் அமல்
நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில், சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இதில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
முஸ்லிம்கள், இலங்கை தமிழர்கள் எதிர்ப்பு
அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க அனுமதி இல்லையென இந்த சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் இதுவரைக்கும், யாருக்கும் எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்தநிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தற்போது குரல் கொடுத்துள்ளார்.
பிளவுவாத அரசியல்
இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஐய் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
சிஏஏ பிளவுமிகு சட்டம்... மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்