தமிழக அரசுக்கு வெற்றிமேல் வெற்றி.. தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்க முடியாது.. ஓங்கி அடித்த நீதி மன்றம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2021, 1:49 PM IST
Highlights

2008 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது மக்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என ஏற்கனவே தீர்ப்புகள் உள்ள தாகவும் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. 

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து அறிவித்து அதிரடிகாட்டி வருகிறது. தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி, அதற்காக உரிய பயிற்சி பெற்று காத்திருப்பவர்களை, ஓதுவார்கள் ஆகவும், அர்ச்சகர்கள் ஆகவும் நியமித்து தமிழக அரசு பணி நியமங்களை வழங்கி வருகிறது. 

ஆனால் இதற்கு தமிழகத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இந்து அறநிலை துறை சார்பில்  செய்யப்பட்டு வரும் அர்ச்சகர் பணி நியமனத்தை எதிர்த்து, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. கோவில்களில் எந்த மொழியில் மந்திரம் ஓத வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கோ, இந்து அறநிலைத்துறைக்கோ இல்லை, எனவே அர்ச்சகர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என  வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில் அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் 1998 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆண்டாண்டு காலமாக கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை மாற்ற முடியாது, மத விவகாரங்களில் அரசு தலையிடவே முடியாது என வாதிட்டார். மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் அவரது வாதத்தை ஏற்க மறுத்த  நீதிபதிகள்.

2008 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் எந்த வகையிலும் வற்புறுத்த முடியாது எனவும் கூறியதுடன், ரங்கராஜன் நரசிம்மன் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஏற்கனவே உயர்நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கும் முரணான முடிவு எடுக்க முடியாது என்றும், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தேவையில்லை என்றும். அப்படி செய்ய இந்த வழக்கிற்கு எந்த தகுதியும் இல்லை எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

 

click me!