கே.பி பார்க் கட்டுமான முறைகேடு. தப்பிக்கும் தலைகள்? பலிகடா ஆகும் உதவி பொறியாளர்கள்.. பகீர் கிளப்பும் வீரப்பன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2021, 12:59 PM IST
Highlights

ஆனால் கடந்த 2020 ஆம்  ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு 1.5 லட்சம் தொகை செலுத்தினால் மட்டுமே வீடு ஒதுக்க முடியும் என குடிசை மாற்று வாரியம் மூலம் அறிவித்துள்ளது

சென்னை புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ள கேபி பார் குடியிருப்பு விவகாரத்தில், உதவி பொறியாளர்கள் மட்டும் பலிகடா ஆக்கப்பட்டுவருவதாக பொதுப்பணித் துறையின் முன்னாள் பொறியாளர் வீரப்பன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி குடிசைகள் இல்லாத தமிழகம் என்ற உன்னத நோக்கத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவசமான கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் நோக்கில், குடிசை மாற்று  வாரியத்தை உருவாக்கினார். இத்துறை மூலம், வீடு இல்லாத குடிசைவாழ் மக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னை புளியந்தோப்பில் கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி வளாகத்தில், கடந்த 2 மாதங்களில் சுமார் 100 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வீடுகளில் கட்டுமான பணி தரமற்றதாக இருக்கிறது என்றும், சுவர்களை கைகளால் தடவிடாலேயே சிமெண்ட் பூச்சு உதிர்ந்து கொட்டுகிறது என்றும்  அங்கு வசிக்கும் மக்கள் புகார் கூறினர். இந்த வலாகத்தில் வசிப்பது தங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த விஷயம் சட்டமன்றம்வரை எதிரொலித்தது. கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தா. மோ அன்பரசன், சேகர்பாபு ஆகியோர், கட்டிடத்தின் தரம் மிக மோசமாக இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர்.

இதுதொடர்பாக இரண்டு மாநகராட்சி அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தும் அவர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையில் கட்டிடத்தின் தரத்தை சென்னை ஐஐடி நிபுணர்கள் குழு ஆய்வு செய்து உள்ளது. மூன்று வாரங்களில் கட்டித்தின் தரம் குறித்து ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுப்பணித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரப்பன், கட்டிடத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் தரமற்றதாக இருக்கும் பட்சத்தில் கட்டிடம் தரமாக இருக்க வாய்ப்பில்லை எனவும், 

ஒரு கட்டிடம் கட்ட படுவதில் பொறியாளர் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. நிர்வாக பொறியாளர், உதவி  நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர் என்ற அடுக்கில் பொறியாளர் துறை இயங்குகிறது. கட்டிடம் கட்டப்படும் போது உதவி பொறியாளர் கட்டிடத்தை மேற்பார்வையிட்டாலும் அதை நிர்வாக பொறியாளர் உறுதி செய்த பிறகே ஒப்பந்ததாரருக்கு கட்டுமானத்தொகை  வழங்கப்படும். பின்னர் செயற்பொறியாளர் ஆய்வு செய்தபிறகு இறுதி தொகை வழங்கப்படும். நிலைமை இப்படி இருக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது நிர்வாக பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் மீது தானே தவிர உதவி பொறியாளர்கள் மீது அல்ல.

ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் உதவி பொறியாளர்கள் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கின்றனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கட்டுமானப்பணி தொடங்கியது முதல் அனைத்து நிலைகளிலும் அரசியல் தலையீடுகள் இருக்கின்றன. இதில் பொறியாளர்கள் தன்னிச்சையாக செயல்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது, இந்த அடுக்குமாடி விவகாரத்தில் இதேபோன்ற தலையீடுகள் இருந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

பொதுப்பணித் துறை, மின்சார வாரியம், நெடுஞ் சாலைத்துறை, குடிநீர் மற்றும் கழிவு நீர் வழங்கல் வாரியம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் போன்ற துறைகளில் அதிக அளவில் பொறியாளர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கிறது என்று அமைச்சர்களே சட்டமன்றத்தில் கூறியுள்ளனர். பொறியாளர்கள் குறைவாக இருப்பதால் பணியில் இருக்கும் பொறியாளர்கள் மீது அதிக பணிச்சுமை விழுகிறது. எனவே இது போன்ற தவறுகளுக்கு துறை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.அதேபோல் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகள் அனைத்தும் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். 

ஆனால் கடந்த 2020 ஆம்  ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு 1.5 லட்சம் தொகை செலுத்தினால் மட்டுமே வீடு ஒதுக்க முடியும் என குடிசை மாற்று வாரியம் மூலம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வீட்டின் பராமரிப்பு தொகை 10% செலுத்த வேண்டும் எனக்கூறி 5 முதல் 6 லட்சம் ரூபாய் நிர்ணயித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.  அது அனைத்தும் சேவை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியத்தை, லாப நோக்கமாக மாற்ற முயற்சியே என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்த வீரப்பன், இந்த கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் கீழ்மட்ட ஊழியர்கள் மீது  மட்டும் நடவடிக்கை எடுப்பது, முறைகேட்டிற்கு தலையாக இருந்தவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சி என குற்றம் சாட்டியுள்ளார். நடவடிக்கை எடுப்பதில் பாராபட்சம்  தொடரும் எனில் மேலுமொரு மவுலிவாக்கம் சம்பவம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.  
 

click me!