கே.டி.ராகவன் வீடியோ..! அடக்கி வாசிக்குமாறு ஜோதிமணிக்கு வந்த எச்சரிக்கை..!

By Selva KathirFirst Published Sep 3, 2021, 12:39 PM IST
Highlights

பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி சிக்கிக் கொண்ட நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட ஒரே அரசியல்வாதி ஜோதி மணி தான். 

கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த ஜோதிமணி கடந்த சில நாட்களாக சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.

பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி சிக்கிக் கொண்ட நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட ஒரே அரசியல்வாதி ஜோதி மணி தான். அதோடு மட்டும் அல்லாமல் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று ராகவனை கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்துவிட்டும் திரும்பினார். பிறகு காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் ராகவனை கைது செய்ய வலியுறுத்தி போராட்டமும் நடத்தினார் ஜோதிமணி.

ஆனால் அத்தோடு ஜோதிமணி இந்த விவகாரத்தில் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார். இதற்கு காரணம் டெல்லியில் இருந்து ஜோதிமணிக்கு வந்த எச்சரிக்கை தான் என்கிறார்கள். கே.டி.ராகவன் விவகாரம் அரசியலாக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்றும் இது அவரது தனிப்பட்ட விவகாரம் மற்றும் பாஜகவின் உட்கட்சி விவகாரம் என்று ஜோதிமணிக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் திருத்தமாக தகவல் பாஸ் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விவகாரங்களில் தேவையில்லாமல் அரசியல் செய்வது பேக் பயர் ஆகக்கூடும் என்றும் ஜோதிமணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் அண்மையில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஆபாச வீடியோவில் சிக்கிய கே.டி.ராகவனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவருக்கு ஆதரவாக இருக்கும் சீமானுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கே.எஸ்.அழகிரி, கே.டி.ராகவன் விவகாரத்தை கையில் எடுப்பது தேவையற்றது என மேடையிலேயே மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார். கேஸ் விலை உயர்ந்து வரும் நிலையில் அதற்கு எதிராக போராடுமாறும் மகளிர் காங்கிரசாருக்கு அவர் உத்தரவு போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இதற்கு காரணம் ராகவன் விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்று டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட சிக்னல் தான் என்கிறார்கள். மேலும் பாஜகவில் மட்டும் அல்ல பெண் நிர்வாகிகள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது அது தொடர்பான புகார்கள் இல்லாத கட்சிகளே இல்லை என்கிற நிலையில் தேவையில்லாமல் பாஜகவை சீண்டி அது சேம் சைடு கோலாகிவிடக்கூடாது என்று காங்கிரஸ் கருதுவதே ஜோதிமணியை ஆப் செய்ய காரணம் என்கிறார்கள்.

click me!