வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.வா, ராஜ்யசபா எம்.பி.யா..? எதை ராஜினாமா செய்வது.. குழப்பத்தில் கே.பி.முனுசாமி..!

By Asianet TamilFirst Published May 5, 2021, 9:19 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாநிலங்களவை எம்.பி. கே.பி.முனுசாமி, எந்தப் பதவியை வைத்துக்கொள்வது என்பதில் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும் மாநிலங்களவை எம்.பி.களாக உள்ளனர். இவர்கள் இருவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டனர். அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், இவர்கள் இருவரும் அமைச்சர்களாகும் ஆசையில் இருந்ததால், தேர்தலில் போட்டியிட்டனர். கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதியிலும் வைத்தியலிங்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தொகுதியிலும் களமிறங்கினர். இத்தேர்தலில் இருவருமே வெற்றி பெற்றனர்.
ஆனால், தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எனவே, வைத்தியலிங்கமும் கே.பி.முனுசாமியும் தற்போதைய நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவியைத் தக்க வைத்துக்கொள்வார்களா அல்லது எம்.எல்.ஏ. பதவிகளை ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். ஒரு வேளை எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொண்டால், எம்.எல்.ஏ. பதவியைத் துறக்க வேண்டும். எப்படி இருந்தாலும் இரண்டில் எந்தப் பதவியைத் தக்க வைத்துக்கொண்டலும் இன்னொரு பதவியை இழக்க வேண்டும். அந்த இடங்களுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

 
ஆனால், இதில் வைத்தியலிங்கத்தின் எம்.பி. பதவி அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. எனவே, வைத்தியலிங்கம் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என்று அதிமுகவில் பேசப்படுகிறது. ஆனால், கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் இன்னும் 2026 ஏப்ரல் வரை உள்ளது. அதாவது, அடுத்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போதுதான் கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. எனவே, எம்.பி., எம்.எல்.ஏ இதில் எந்தப் பதவியை ராஜினாமா செய்வது என்பதில் கே.பி.முனுசாமி குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கட்சி தலைமையோடு ஆலோசனை செய்து, அதில் எடுக்கும் முடிவுப்படி கே.பி.முனுசாமி செயல்படுவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

click me!