அதிமுக மட்டும் பிளவுப்படமால் போயிருந்தால்... திமுக ஆட்சிக்கு வந்தது பற்றி ஹெச்.ராஜா சொன்ன கருத்து..!

By Asianet TamilFirst Published May 5, 2021, 8:55 PM IST
Highlights

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக மட்டும் பிளவுப்படாமல் போயிருந்தால், இன்றைக்கு திமுக ஆட்சிக்கே வந்திருக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து  வன்முறை சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்த சம்பவங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ், பாஜக காரணம் என்று இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்கின்றன. இந்நிலையில் இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு  தெரிவித்து நாடு முழுவதும் பாஜக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்  பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பங்கேற்றார். 
பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த இரண்டு நாட்களாக மேற்கு வங்கத்தில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இந்திய சரித்திரத்திலேயே இது கறுப்பு அத்தியாயம். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். எனவே, மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள  திமுக அரசை 100 நாட்களுக்கு நான் விமர்சிக்கப்போவதில்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக மட்டும் பிளவுப்படாமல் போயிருந்தால், இன்றைக்கு திமுக ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற எண்ணத்தைப் போக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

click me!