
இந்தியாவில் கொரோனா 3வது அலையை தவிர்க்க முடியாது, அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் வேகத்தில் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,780 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்கள் பலரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா தொற்றின் 3வது அலையை தடுக்க முடியாது. எப்போதும் உருவாகும் என தெரியததால், எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அதேபோல், எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறுகையில்;- இந்தியா மிக விரைவில் கொரோனா தொற்றின் 3ம் அலையை சந்திக்க உள்ளது. இதனால் குறைந்தது இரு வராங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம். மருத்துவமனைகளை அதிகரித்தல், போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், மருத்துவமனைகளில் சிகிக்சை முறையை மாற்றுதல் ஆகியவற்றின் மூலமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலமும், கடுமையான ஊரங்கினை அமல் படுத்துவதன் மூலமும் கொரோனா சங்கிலியை நம்மால் உடைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.