இன்னும் தீவிரமடைகிறதா கொரோனா கட்டுப்பாடுகள்?... அதிகாரிகளுடன் இன்று மாலை மு.க.ஸ்டாலின் ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 5, 2021, 4:47 PM IST
Highlights

திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 

தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக  இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், நேற்று முன் தினம் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன் படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. மளிகைகடைகள், தேநீர் கடைகள் 12 மணி வரை மட்டுமே திறக்கலாம். உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

அதுமட்டுமின்றி இன்று அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி, மாற்றுத்திறனாளி பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம், அரசு பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி ஆகிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து நாளை மறுநாள் காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதும் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 
 

click me!