
கால்நடை வர்த்தகத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதாகக் கூறி மாட்டிறைச்சி மீது மத்திய அரசு தடை விதித்திருப்பது நாடு முழுவதும் போராட்ட விதைகளை ஆழமாக நட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான நடவடிக்கை, இஸ்லாமியர்களை நசுக்கும் செயல் என மத்திய அரசை சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளியிலும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒற்றைக் கலாச்சாரத்தை அமல்படுத்த முயலும் காவிக்களின் முயற்சிகளை தவிடுபொடியாக்குவோம் என்று மாணவ அமைப்பினர் போர்க்கொடி உயர்தியுள்ளனர்.
இந்தச் சூழலில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு, மத்திய அரசு மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல், முழுக்க முழுக்க மோடியையே புகழ்ந்து தள்ளினார்.
அப்போது பேசிய அவர், "மோடி பிரதமரான பின்பு இந்தியா அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இப்போது தேர்தல் நடத்தினாலும் மோடியே வெற்றி பெறுவார். ஏனெனில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைப் போல நாங்கள் எந்த ஊழலையும் செய்யவில்லை. 2019லும் மோடியே பிரதமர் . இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழகத்தை மத்திய அரசு இயக்குவதாக சிலர் உண்மை தெரியாமல் பேசி வருகின்றனர். மாநிலங்களுக்கே சென்று மத்திய அரசு சேவை செய்து வருகின்றது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரச் சரிவில் சிக்கிய போது இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை... இவ்வாறு வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.