
வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி காணப்படுகிறது. விளைவிக்கப்பட்ட பயிர்கள் நீரின்றி கருகி மடிந்து போனதால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்,செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, உள்ளிட்ட முக்கிய ஏரிகள் வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் தலைநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
பிற மாவட்டங்களில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்க மேற்கொள்ளப்பட்டு வந்த பணி ஏறத்தாள நிறைவடைந்துள்ளது. ராட்சத மின் மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து, பெரிய குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்காக பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையே இப்பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் 62 சதவீத மழை குறைவால் மாபெரும் வறட்சி நிலவுவதாகக் கூறினார்.
இருப்பினும் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படாத வகையில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சிக்கராயபுரம் குல்குவாரியில் இருந்து நாளொண்றுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும் என்றார். மேலும் இத்திட்டத்திற்காக அரசு 13 கோடியே 50 லட்சம் ரூபாயை செலவு செய்ததாகவும் கூறினார்.