
பாகுபலி,தங்கல் போன்ற பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கும், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கும் ஒரே மாதிரி வரி என்பது இந்த தொழிலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
GST குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரியை ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது. இது ஒருபுறம் வரவேற்கதக்கதாக இருந்தாலும் மறுபுறம் பலவகையில் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. நாட்டில் தலைவிரித்தாடும் அதிகமான லஞ்சம் ஊழல், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றால் கல்வி, ரியல் எஸ்டேட், போன்ற பலதரப்பட்ட தொழில்கள் முடங்கியுள்ளன,.
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பழைய நிலையையே இன்னும் அடையாமல் வியாபாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். வறட்சியால் அன்றாட பிழைப்பை நடத்துவதற்கு கூட வழியில்லாமல் மக்கள் தவித்து நிற்கின்றனர். ஏற்கனவே அதிக வரிகள் விதிப்பால் பலதரப்பினரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த நிலையில் புதிய வரிச்சுமை என்பது மேலும் ஒரு சுமையாக மாறக்கூடும்.
ஹோட்டல்களுக்கு 18 சதவீதமாக வரி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதேபோன்று திரைப்படங்களுக்கு 28 சதவிதம் விதிக்கப்பட்டுள்ளது பாகுபலி,தங்கல் போன்ற பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கும், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கும் ஒரே மாதிரி வரி என்பது இந்த தொழிலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
திருட்டு விசிடி, ஆன்லைனில் திரைப்படம் உள்ளிட்டவற்றால் திரைப்படத் தொழில் முடங்கி வருகின்றன. இந்தநிலையில் அதிகபட்ச வரிவிதிப்பு என்பது இனி இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் இதனை விட்டு செல்லக்குடிய நிலை ஏற்படும். எடுக்கப்படும் 99 சதவிகித படங்கள் செலவிட்ட தொகையை எடுக்க முடியாமல் உள்ளதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு வரிவிதிப்பை அமல்படுத்த வேண்டும்.
குளுகுளு அறைக்குள் உட்கார்ந்து கொண்டு வெளியிடும் அறிவிப்பாக இல்லாமல் அதன் சாதக பாதங்களை உணர்ந்து தொழில் செய்வோர்,வியாபாரிகள், ஏழைஎளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில்,
மக்கள் கருத்தே மகேசன் கருத்தாக கொண்டு வரி விதிப்பு விவகாரத்தில் தெளிவான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.