
அதிமுக என்ற மாபெரும் கட்சிக்கு யார் தற்போது தலைவர் என்பதை அறிய முடியாமல் அக்கட்சித் தொண்டர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். ஒருபுறம் கொங்கு லாபி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி, மறுபுறம் மிஸ்டர் விசுவாசம் பன்னீர் செல்வம், திகார் சிறைச்சாலையையே தீக்கதிராக்கி ஜாமீனில் விடுதலையான டிடிவி தினகரன் என அதிமுகவை மூன்று பேரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகஅரசின் செயல்பாடுகளில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதாக பொதுவெளியில் பிரதானமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அமைச்சர்கள் இதனை முற்றாக மறுத்து வருகின்றனர்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் முதல், நீட் தேர்வு வரை ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்த பல திட்டங்களை எடப்பாடி அரசு இசைந்து கொடுத்ததே தமிழக அரசு மீதான இவ்விமர்சனத்திற்கு காரணம்...
தமிழக அரசு சுயமாக செயல்படுகிறது. யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்று அதிமுக அமைச்சர்கள் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியைச் சேர்ந்தவரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை தமிழக அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது. சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு என்ற முடிவை தமிழகம் ஒரு போதும் ஏற்காது. ஆர்.கே.நகர். இடைத்தேர்தலை ரத்து செய்த ஆணையத்தின் நடவடிக்கை தவறானது.
இது தற்காலிகமான ஒன்று தான்.விரைவில் தேர்தல் நடைபெறும். அதிமுகவில் பிளவா? இதனை தேர்தல் ஆணையமே ஏற்றுக் கொள்ளவில்லை. மலேசியா சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அந்நாட்டுப் போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டதை அறிந்தேன். இது முற்றிலும் தவறான ஒன்று. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.