ஒரு தொகுதிக்கு ஓ.கே. சொன்ன வேல்முருகன்... உதய சூரியன் சின்னத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டி...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 8, 2021, 7:07 PM IST
Highlights

மீண்டும் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் இரண்டும் கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்விட்டன. தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு ஆகிய பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மதிமுக - 6, மார்க்சிஸ்ட் - 6, காங்கிரஸ் - 25 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் தங்களது ஆதரவை திமுகவிற்கு அளித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை அக்கட்சியின் தலைவர் உட்பட நிர்வாகிகள் திமுக தலைமை அலுவலகத்துக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் நெய்வேலி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் திமுக வேல்முருகன் கட்சிக்கு ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

அதன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன், “திமுக எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். எந்தப் பகுதியை எங்களுக்கு கொடுத்தாலும் எங்களுடைய ஒரே கொள்கை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் சொல்கிறார்களோ அதே தொகுதியில் போட்டியிட நாங்கள் தயார்” எனத் தெரிவித்திருந்தார்.

மீண்டும் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதியில் போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி சம்மதித்ததை அடுத்து ஒப்பந்தம் கையெழுத்தானது.  அதேபோல் ஆதித் தமிழர் பேரவைக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார். 
 

tags
click me!