
சென்னை ஐஐடியில் செம்மொழியான தமிழ் மொழியை புறந்தள்ளிவிட்டு செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு சிம்மாசனமா? என கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது உறுதி என எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா - பன்மதம், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் என்ற பண்பாடுகள் நிறைந்த ஒரு நாடு. அதனால்தான் இதை ஒரு மதச்சார்பு நாடாக அமைக்காமல், அரசியல் சட்ட கர்த்தாக்கள் மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயகக் குடியரசு ஆட்சியாகவே அமைத்தனர். இது அரசியல் சட்டத்தின் (அடிப்படை உரிமைகள் உள்பட) அடிப்படைக் கட்டுமானம்; எளிதில் மாற்ற முடியாதது; மாற்றக் கூடாததும் ஆகும்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன்மீது பதவிப் பிரமாணம் எடுக்கின்றனர். உலக நாடுகள் பலவற்றிலும் பேசப்படும், எழுதப்படும் மொழி செம்மொழியான தமிழ் மொழி! நமது அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் (பிரிவுகள் 344(1), 351 ஆகியவற்றின்படி) இடம்பெற்றுள்ள மொழிகள், எதுவும் தேசிய மொழி என்ற தனித்தகுதி பெற்று பிரகடனப்படுத்தாமல், பொதுவில் மொழிகள் - (Languages என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்) மொத்தம் 22 ஆகும்.
இந்த 22 மொழிகளில் அகர வரிசையில் சமஸ்கிருதம் 17 ஆவது இடத்தில் உள்ளது. இந்த 22 மொழிகளில் உலக நாடுகள் பலவற்றிலும் பேசும் - எழுதப்படும் மொழி - உயிர்ப்புள்ள செம்மொழியான தமிழ் மொழியேயாகும். ஐரோப்பாவின் பற்பல நாடுகள், கனடா பகுதிகளில், ஆஸ்திரேலியாவில், ஆப்பிரிக்காவில், ஆசியா கண்டத்திலும், சிங்கப்பூர், மலேசியா, மியான்மா (பர்மா) போன்ற பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் பேசும் மொழி - சுமார் 8 கோடி பேர்களுக்குமேல் பேசும் மொழி - வளமான செம்மொழியாகும்!
வெகு, வெகு, குறைந்த எண்ணிக்கையில் உள்ளோர் இந்த அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் வெகுக்குறைந்த எண்ணிக்கையில் உள்ளோர் பேசும், எழுதும் மொழி சமஸ்கிருதம்தான்!
ஆனால், ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத இருக்கையை ஏற்படுத்த, சாமியார் சந்த் ரிஜிந்தர் சிங்ஜி மகராஜ் (கற்பழிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு, ஜெயிலுக்குச் சென்ற காவிச் சாமியார் ராம்ரகீம் பாபா போன்று மகராஜ் பட்டத்தையே சூட்டி பவனி வருவார்கள்) என்பவர் தனி இருக்கை அமைக்க (90 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறாராம்) - சமஸ்கிருதத்தில், வேதத்தில் உள்ள விஞ்ஞானத்தை அலசி ஆராய இருக்கை அமைத்து - பிஎச்.டி., முனைவர் பட்டத்திற்கு உதவித் தொகை வழங்கப் போகிறார்கள்.
சமஸ்கிருதம் வருமுன்னர் பிராகிருத மொழிதானே இருந்தது. பிறகுதானே கூட்டுக் கலவையாக சமஸ்கிருதம் (நன்றாக சமைக்கப்பட்ட மொழியாயிற்றே!). இதை மறைத்துவிட்டு, ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக ஆரிய மொழி ஆதிக்கத் திணிப்பை மறைமுகமாக இப்படி நடத்துவதா? அரசு பணத்தில் நடத்தும் இந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி பெற்ற ஐ.ஐ.டி. (வெளிநாட்டு உதவி - உள்நாட்டு அனைத்து மக்கள் வரிப்பணத்தைப் பெற்று நடப்பதில்) இப்படி ஒரு ஆரிய ஆதிக்க ஊடுருவலை திட்டமிட்டே செய்கின்றனர்.
முதலில் செம்மொழி தமிழுக்கு அரசே முன்வந்து இருக்கை அமைக்கட்டும்! 22 மொழிகளில் எங்கெங்கு ஐ.ஐ.டி.,க்கள் உள்ளனவோ அங்கங்கு அந்தந்த மொழி இருக்கைகளை ஏற்படுத்தி, அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம அந்தஸ்து வழங்க முன்வரவேண்டும். தமிழ்நாட்டில் நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது உறுதி! ஏதோ ஒருவர் ஏற்பாடு செய்தார் என்று கூறி, ஐ.ஐ.டி., இயக்குநரான பார்ப்பனர் பட்டும் படாமலேயே - தனக்கு இதுபற்றி அதிகம் தெரியாததுபோல, கேட்டவர்களிடம் பதில் கூறியிருப்பது நமது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது உறுதி. செம்மொழியான தமிழ்மொழியைப் புறந்தள்ளி, செத்தமொழிக்கு சிம்மாசனம் அளிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என வீரமணி தெரிவித்துள்ளார்.